Neeraj Cohpra: இந்தியா-பாகிஸ்தான் ரசிகர்களை நெகிழ செய்த நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் அம்மாக்கள்!
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கமும், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கமும் வென்றனர். இதனையடுத்து இரு வீரர்கள் அம்மாக்களும் நெகிழ்ச்சியாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாரிஸ்: 2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் வென்று கொடுத்து சாதனை படைத்திருந்தார் நீரஜ் சோப்ரா. அதனைத் தொடர்ந்து உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். இதனால் இந்தாண்டு ஒலிம்பிக் போட்டியிலும் நீரஜ் பதக்கம் வெல்வது கன்ஃபார்ம் என ரசிகர்கள் அடித்துக் கூறினர்.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்துள்ளது. 6 சுற்றுகளில் 5 முறை ஃபவுல் செய்த நீரஜ் சோப்ரா, ஒருமுறை மட்டுமே துல்லியமாக வீசினார். அதில் 89.45 மீட்டர் தூரம் வீசி வெள்ளி பதக்கத்தை தனதாக்கினார். அதேநேரம் அதிகம் எதிர்பார்க்காத பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி தங்க பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் தங்கம் வென்று சாதனை படைத்தது
முன்னதாக 2023 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வெள்ளி பதக்கமும் வென்றிருந்தனர். இந்தமுறை ஒலிம்பிக்கில் அது அப்படியே தலை கீழாகியுள்ளது. ஆனால், தூரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் அர்ஷத் நதீம் புதிய இலக்கை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி குறித்து பேசியிருந்த நீரஜ் சோப்ரா, இந்தியாவுக்காக மீண்டும் பதக்கம் வெல்வதில் மகிழ்ச்சியே; ஆனால் தற்போது நான் எனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ஒவ்வொரு வீரருக்கும் ஒருநாள் அவருடையதாக இருக்கும், இன்று அர்ஷத் நதீமின் நாள் என நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.
அதேபோல், போட்டி முடிந்த பின்னரும், பதக்கம் வாங்கும் போதும் நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் இருவரும் நெருங்கிய நண்பர்களை போல வலம் வந்தனர். ஏற்கனவே இருவரும் பல போட்டிகளில் பங்கேற்றிருந்ததால் அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்ததை பார்க்க முடிந்தது. இதனிடையே கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை, ரசிகர்கள் பெரும்பாலும் ஒரு போரை போல பார்க்கும் மனநிலையில் உள்ளனர். இதனால் நீரஜ் சோப்ரா – அர்ஷத் நதீம் நட்பை பின்னணியாக வைத்து சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய விவாதமே நடைபெற்றது.
மேலும் படிக்க - லுவானா அலோன்சோ... ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்டாரா?
இந்திய ரசிகர்கள் பலரும் அர்ஷத் நதீம்க்கு வாழ்த்துத் தெரிவிக்க, பாகிஸ்தான் ரசிகர்கள் நீரஜ் சோப்ராவையும் விட்டுக்கொடுக்காமல் பாராட்டி வந்தனர். இந்நிலையில், இந்தப் போட்டியின் முடிவு பற்றி பேசியுள்ள நீரஜ் சோப்ராவின் அம்மா சரோஜ் தேவி, “நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றதில் மகிழ்ச்சியாக உள்ளேன். தங்கம் வென்ற அர்ஷத் நமீதும் எனது குழந்தையே. அனைவரும் கடினமான உழைப்பிற்குப் பின்னரே அங்கு செல்கின்றனர்” என கூறியிருந்தார். அதேபோல் அர்ஷத் நதீமின் அம்மாவும் நீரஜ் சோப்ராவை தனது மகன் தான் என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். ”நீரஜ் சோப்ராவும் என்னுடைய மகன் தான்; அவர் நதீமின் நண்பர், சகோதரரும் கூட. வெற்றியும் தோல்வியும் ஒரு அங்கம் தான், நிறைய பதக்கங்கள் வெல்ல இறைவன் அவரை ஆசிர்வதிக்கட்டும், அவர்கள் சகோதரர்கள் போன்றவர்கள். நான் நீரஜ் சோப்ராவிற்காகவும் பிரார்த்திப்பேன்” என்றுள்ளார்.
இவர்கள் இருவரது பேட்டிகளும் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரியளவில் ட்ரெண்டாகி வருகின்றன. இதனிடையே தங்கம் வென்ற அர்ஷத் நதீம் ஸ்பான்ஸர்ஷிப் கிடைக்காமல் சமூக வலைத்தளங்களில் நிதி திரட்டி ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். மேலும் அவர் மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?