LuanaAlonso: ‘அழகிய லைலா’ லுவானா அலோன்சோ... ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்டாரா? உண்மை இதுதான்!
பராகுவே நாட்டு இளம் நீச்சல் வீராங்கனையான லுவானா அலோன்சா ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவரது அழகால் வீரர்களின் கவனம் சிதறுவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், உண்மை அது இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது.
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகம் இருப்பதாகக் கூறி, இறுதிப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அவர் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். அதோடு தகுதி நீக்கத்துக்கு எதிராகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் மனு கொடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை முடிவுகள் ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், பராகுவே நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சா ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. முக்கியமாக அவரின் பேரழகால் சக வீரர்களின் கவனம் சிதறுவதாகவும், அதனால் தான் லுவானா வெளியேற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனிடையே லுவானா அலோன்சா நீச்சல் போட்டிகளில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை தொடர்ந்து லுவானா அலோன்சா வெளியேற்றப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால், உண்மை அது இல்லை எனவும், லுவானா அலோன்சா அவராகவே ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேறியதும் தற்போது தெரியவந்துள்ளது. பராகுவா நாட்டிற்காக 100 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியில் பங்கேற்ற லுவானா, 0.24 வினாடிகளில் அரையிறுதி வாப்பை தவறவிட்டார். இதனையடுத்து அவருக்கு ஒலிம்பிக்கில் வேறு எந்தப் போட்டிகளும் இல்லை என்றாலும், மற்ற போட்டிகளை பார்க்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரோ பாரிஸின் பல்வேறு பகுதிகளை சுற்றுலாப் பயணி போல பார்வையிட்டு வந்துள்ளார். அதேபோல், டிஸ்னிலாண்ட் உள்ளிட்ட தீம் பார்க்குகளிலும் ரவுண்ட் அடித்துள்ளார்.
மேலும் படிக்க - வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கம்... ஒலிம்பிக் முடிவதற்குள் முடிவு!
இதனால் தான் அவராகவே ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேறியதாகவும், அவரை பராகுவே நிர்வாகமோ அல்லது பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டியோ அனுப்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் அமெரிக்கா செல்லவுள்ள லுவானா அலோன்சா, அங்கு அரசியல் தொடர்புடைய படிப்பை படிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முன்பே, நீச்சலில் இருந்து விலக லுவானா அலோன்சா முடிவெடுத்துவிட்டதும் தற்போது தெரியவந்துள்ளது. இதனால் அழகு காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து லுவானா அலோன்சா வெளியேற்றப்பட்டதாக பரவிய செய்திகள் வதந்தி என நிரூபணமாகியுள்ளது.
What's Your Reaction?