வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கம்... ஒலிம்பிக் முடிவதற்குள் முடிவு தெரியும்..

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து, ஒலிம்பிக் தொடர் முடிவதற்குள் இறுதி செய்யப்படும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Aug 9, 2024 - 17:23
Aug 9, 2024 - 17:35
 0
வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கம்... ஒலிம்பிக் முடிவதற்குள் முடிவு தெரியும்..
வினேஷ் போகத் மனுவிற்கு சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் பதில்

பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்துள்ளது. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்தியா இதுவரை ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. 

நேற்று நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை இழந்தார். இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. கடந்த ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கத்தை வென்ற இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு இம்முறை வெள்ளி பதக்கமே கிடைத்தது.

அதேபோல், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றது. ஸ்பெயின் உடனான போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2020 ஒலிம்பிக் தொடரிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியுடன் இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஹாக்கிப் போட்டியில் இருந்து ஓய்வுப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கத்தையும்  தாய்நாட்டுக்காக வென்று கொடுத்தார். இதேபோல் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அசத்தினார்.

ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் கியூபா நாட்டைச் சேர்ந்த குஸ்மான் லோப்ஸுடன் மோதினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் குஸ்மான் லோப்ஸை வீழ்த்தி அபார வெறி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டி முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார். இந்திய நேரப்படி இன்று இரவு 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கம் கிடைக்கும். தோற்றாலும் வெள்ளி கிடைக்கும் என்ற பதக்க வாய்ப்பு அவருக்கு உருவாகி இருந்தது.

இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத்,100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்தது.

இறுதிப்போட்டிக்கு முன்பாக 2 கிலோ எடை அதிகரித்து இருந்ததை, அறிந்து கொண்ட வினேஷ் போகத், உணவு உண்ணாமல், இரவு முழுக்க அதிதீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு ஒரே இரவில் 1.9 எடை குறைத்துள்ளார். முடிவில், 100 கிராம் எடையை குறைக்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதோடு, இரவு முழுவதும் உடற்பயிற்சி மேற்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் மனு தொடரப்பட்டது. முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப்போட்டியில் விளையாட தன்னை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அவா் கேட்டிருந்தாா்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி, பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள் தீர்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும், விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தின் தற்காலிக பிரிவின் நடைமுறை வேகமாக உள்ளது. ஆனால் ஒரு மணி நேரத்திற்குள் தகுதிகள் குறித்த முடிவை வெளியிடுவது சாத்தியமில்லை. உலக மல்யுத்த ஐக்கியத்திடன் முதலில் கேட்கப்பட வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow