தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் நெருங்கிய நண்பர்.. கருத்து வேறுபாடு இல்லை.. பால் கனகராஜ் விளக்கம்

ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் நானும் ஆம்ஸ்ட்ராங்கும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தோம் என்று பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் நெருங்கிய நண்பர்.. கருத்து வேறுபாடு இல்லை.. பால் கனகராஜ் விளக்கம்
ஆம்ஸ்ட்ராங் எனக்கு நெருங்கிய நண்பர் என பால் கனகராஜ் பேட்டி

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் 23 பேரை கைது செய்தனர். அதில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜிற்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பினர். அதன்படி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் உள்ள ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக பால்கனகராஜ் ஆஜரானார்.

அவரிடம் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் பால் கனகராஜிடம் விசாரணை நடத்தினர். பார் கவுன்சில் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகத்தை தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஆனந்தன் எழுப்பினார்.

அதனால் அந்த கோணத்தில் தங்களின் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்த தொடங்கி உள்ளனர். அதனால் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பால்கனகராஜிற்கு சம்மன் கொடுக்கப்பட்டு நேரில் வரவைத்து விசாரணை நடந்தது.  மேலும் பால் கனகராஜ் இதற்கு முன்பாக ரவுடி நாகேந்திரனை பரோலில் எடுத்தது இவர்தான் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் ரூ.200 கோடி நிலப் பிரச்சினையா?.. அஸ்வத்தாமன் சிக்கியது எப்படி?...

அதேபோல தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலுக்காக இரட்டை கொலை வழக்கு ஒன்றிலும் நீதிமன்றத்தில் பால்கனகராஜ் வழக்கு விசாரணை நடத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. திண்டுக்கல் ரவுடி மோகன்ராம் மீதான வழக்கு ஒன்றிற்கும் பால் கனகராஜ் ஆஜராகி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஏதேனும் முக்கிய தகவல்கள் கிடைக்குமா? அல்லது தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில் தொடர்பாகவும் தகவல்களை சேகரிப்பதற்காகவும் பால்கனகராஜிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணை நடக்கும் எழும்பூர் அலுவலகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் வழக்கறிஞர் குழுவுடன் வந்தார். இதன் பிறகு விசாரணை முடிந்த பிறகு வெளியே வந்த பால் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 33 ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். குற்றவாளிகளுக்கு நான் ஆஜரானதால் என்னிடம் விசாரித்தால் ஏதேனும் துப்பு கிடைக்கும் என்ற நோக்கில் சம்மன் கொடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். 

நான் நடத்திய வழக்குகளில் குற்றவாளிகள் பெயர்களை கேட்டு விசாரித்தனர். அவர்கள் உண்டான தொடர்பு, அவர்கள் என்னிடம் பேசிய தொலைபேசி தகவல்கள் ஆகியவற்றை வைத்து என்னிடம் விசாரணை நடத்தினர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் என் மூலமாக ஏதேனும் தகவல்கள் கிடைக்குமா என்று விசாரித்தனர். எனக்கு என்ன தெரியுமோ அதனை போலீசாரிடம் தெரிவித்துள்ளேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளேன்.

இதையும் படிக்க: கூலிப்படை தலைவனின் உதவியோடு ரவுடி சம்போ செந்தில் தலைமறைவு?.. போலீஸார் தீவிர வேட்டை..

விசாரணை முடித்து என்னை அனுப்பி வைத்து விட்டனர். இந்த கொலைக்கு தனக்கும் சம்பந்தமில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. கொலை செய்தது யார் என்பது தெரியாது. என்னுடைய போன் கால் விவரங்களை போலீசார் எடுத்து விசாரணை நடத்தினர்”. 

“விசாரணை அதிக நேரம் எடுத்து கொண்ட காவல்துறையை பாராட்ட வேண்டும். உண்மை குற்றவாளியை கண்டறிய போலீசார் தீவிரமாக உள்ளனர். இந்த கொலை சாதாரண கொலை அல்ல. இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை பல காரணங்கள் இருக்கலாம். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொலை செய்தார்களா? தனிப்ட்ட காரணமா? என்னை விசாரித்ததில் எந்த தவறுமில்லை. அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன்.

காவல்துறை எந்த சந்தர்ப்பத்தையும் தவற விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள். ஆனால் வழக்கறிஞர்கள் தங்களது தரப்புவாதியிடம் பேசுவதை காவல்துறையிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை. குற்றவாளி குற்றம் செய்வதற்கு முன்பாக பேசியிருந்தால் அது குறித்து விசாரிக்க போலீசாருக்கு முழு அதிகாரம் இருக்கிறது. 

கடந்த 4ஆம் தேதி வாய்மொழியாக விசாரித்தார்கள். தற்போது சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனர். நோட்டீஸ் கொடுத்து தான் விசாரணை நடத்தி உள்ளனர். ரவுடி நாகேந்திரன் வழக்கிற்காக ஆஜரானீர்களா என போலீசார் கேட்டனர். ஆனால் அவரது வீட்டு கிரகபிரவேசத்திற்காக அவரை வெளியே வருவதற்காக காவல்துறையிடம் பேசினேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் பார் கவுன்சில் தேர்தலில் நடந்த மோதல் காரணமாக கொலை நடந்து இருக்கலாமோ என்ற சந்தேகத்தை எழுப்பினார்”.

இதையும் படிக்க: ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி துப்பாக்கியை காட்டிய பிரபல ரவுடியின் மகன்.. தட்டித் தூக்கிய போலீஸார்

“பார் கவுன்சில் மற்றும் எழும்பூர் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பங்கு இருக்குகேகோ என்ற சந்தேகத்தை ஆனந்தன் எழுப்பினார். இந்த கொலைக்கும் அந்த தோல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதனை போலீசாரிடம் தெளிவாக கூறியுள்ளேன். தேர்தல் தோல்வியா, எனது வழக்கின் வாதிகளா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினர்.

ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. 2015 ஆம் ஆண்டு இருந்தது. ஆனால் அது ஒரே வாரத்தில் சரியாகி விட்டது. 2017 ஆம் ஆண்டில் இருந்து நானும் ஆம்ஸ்ட்ராங்கும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தோம். ஆம்ஸ்ட்ராங் அவரது இல்ல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்துள்ளேன். என்னுடைய இல்ல நிகழ்ச்சிகளுக்கு வந்துள்ளார். பல கூட்டங்களில் ஒன்றாக பேசி உள்ளோம். ஒன்றாக உணவருந்தி உள்ளோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. 

காவல்துறை எந்த கோணத்தில் விசாரணையை கொண்டு செல்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் பொதுவான கருத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பது. குடும்பத்தினர் விருப்பம், கட்சியினர் விருப்பம். காவல்துறை சரியாக விசாரணை நடத்துகிறார்கள் என்பதனை தன்னால் சொல்ல இயலாது. என்னை பொறுத்தவரையில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளேன். இனிமேல் என்னை போலீசார் விசாரணைக்கு அழைக்கவேண்டிய அவசியமில்லை. என்னுடைய 2 செல்போன்கள் எதையும் போலீசார் பறிமுதல் செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.