ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி துப்பாக்கியை காட்டிய பிரபல ரவுடியின் மகன்.. தட்டித் தூக்கிய போலீஸார்

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Aug 7, 2024 - 14:35
Aug 7, 2024 - 14:38
 0
ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி துப்பாக்கியை காட்டிய பிரபல ரவுடியின் மகன்..  தட்டித் தூக்கிய போலீஸார்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமன்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 22வது நபராக தமிழக இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிசிடிவி காட்சிகள் மூலமாக கொலை செய்த நபர்கள் 11 பேரை முதற்கட்டமாக கைது செய்தனர். அதன்பின் இந்தக் கொலையில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார் என்பது குறித்து தனிப்படைகள் அமைத்து விரிவான விசாரணை மேற்கொண்டனர். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆயுதங்கள் பணம் முன்விரோதம் மூலம் தொடர்பு உள்ளிட்ட விவகாரங்கள் அடிப்படையில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலை வழக்கில் முதற்கட்டமாக கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட போது அடுத்தடுத்து பலரும் சிக்கினர்.

அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக பணத்தை கொடுத்தவர், நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்தவர் என 21 பேர் வரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கும் விதமாக தான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று  தகவல் வெளியானாலும், வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பிரபல ரவுடிகள் சம்பவம் செந்தில் சீசிங் ராஜா, மற்றும் நாகேந்திரன் ஆகியோர் தொடர்பு உள்ளதா என தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சம்பவம் செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்து வரும் நிலையில் ரவுடி நாகேந்திரன் வழக்கு ஒன்று சிறையில் உள்ளார்.

இந்நிலையில் கைதான நபர்களில் பொன்னை பாலு அருள், ராமு ஆகியோருக்கு 3 நாட்களும், சிவசக்தி மற்றும் ஹரிதரன் இருவருக்கும் ஐந்து நாட்கள் எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வழக்கறிஞர் அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கப்பட்டு வரும் ரவுடி நாகேந்திரன் மகன் ஆவார். குறிப்பாக அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சோழவரம் அருகே மோரை என்னும் பகுதியில் நிலம் தொடர்பான தகராறில், ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி அஸ்வாத்தம்மன் துப்பாக்கியை காண்பித்ததாகவும் இதனால் இருதரப்புக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் அறிந்து பரோலில் வந்த நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை செல்போனில் அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தகராறு காரணமாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சிறையில் சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் எனவும், அவரது மகன் அஸ்வத்தாமனுக்கும், இதில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வந்த நிலையில் நேற்று இது தொடர்பாக அஸ்வாத்தமனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் வழக்கறிஞர் அஸ்வத்தாமனுக்கு தொடர்பு இருப்பது உறுதியானதால்  போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனிடம் நிலம் தொடர்பான தகராறில் ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி துப்பாக்கியை காண்பித்து மிரட்டியது உண்மையா? இது தொடர்பாக முன் விரோதம் ஏற்பட்டதா என போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரபல ரவுடி நாகேந்திரன் சிறையிலிருந்து கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அஸ்வத்தாமன் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறாவது வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow