மழைக்காலத்தில் செல்லப்பிராணிகளை எப்படிப் பராமரிக்கலாம்?

மழைக்காலத்தில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் அதிக அளவில் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதால் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம்.

Sep 3, 2024 - 18:33
 0
மழைக்காலத்தில் செல்லப்பிராணிகளை எப்படிப் பராமரிக்கலாம்?
pet care tips in tamil

மனிதர்களைப் போலவே விலங்குகளும் ஒவ்வொரு பருவ நிலைக்கும் ஏற்றாற்போல தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். செல்லப்பிராணிகள் முழுதாக நம்மைச் சார்ந்து வளர்வதால் அவற்றை எல்லாப் பருவக் காலத்திலும் கவனமாக பராமரிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. மழைக்காலத்தில் செல்லப்பிராணிகளை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பது குறித்து கால்நடை மருத்துவர் செல்வநாதனிடம் கேட்டதற்கு...

“காற்றில் ஈரப்பதம் அதிகமாகும் போது நாய் மற்றும் பூனைகளின் காது, தோல் பகுதிகளில் பூஞ்சைகள் உருவாகின்றன. எந்த ஒரு உயிரினமும் மழைக்காலத்தில்தான் அதிகமாக இனப்பெருக்கம் செய்யும். ஆகவே செல்லப்பிராணிகளின் ஒட்டுண்ணிகளான உன்னி, தெள்ளுப்பூச்சியின் எண்ணிக்கை அதிகரிக்கும். வைரஸ் காய்ச்சல், பாக்டீரியா காய்ச்சலின் தாக்குதலால் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் canine demodicosis எனப்படும் தோல்நோய் வருகிறது.

pug, spitz, boxer, shihtsu போன்ற BRACHYCEPHALIC வகை நாய்களுக்கு மூக்கு சிறியதாக இருக்கும். இதனால் மூக்கின் வழியே கிருமித்தொற்று ஏற்பட பெருமளவு வாய்ப்புகள் உண்டு. மழைக்காலத்தில் கொசுக்களும், ஈக்களும் அதிகளவில் இருக்கும். கொசு கடிப்பதன் மூலம் பிராணிகளுக்கு heart worm என்று சொல்லப்படும் இதயப்புழு நோய் ஏற்படுகிறது. மழைக்காலத்தில் உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் அடிபட்டு புண் இருந்தால் அதில் ஈக்கள் மொய்க்கும். இனப்பெருக்கம் செய்யும் ஈக்கள் இது போன்ற புண்களில்தான் முட்டையிடும். நாளடைவில் அந்த முட்டைகள் புண்ணில் புழுக்களாக மாறி உடலெங்கும் பரவும் அபாயம் உள்ளது.

பிராணிகளுக்கான உணவுப்பொருட்களை முறையாக பாதுகாத்து வைக்கவில்லையென்றால் aspergillosis என்கிற பூஞ்சை உற்பத்தியாகிறது. அந்த பூஞ்சைகள் பிராணிகளின் ரத்தத்தில் கலந்து உடலில் பல்வேறு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். தேங்கியிருக்கும் தண்ணீரில் எலியின் சிறுநீர் கழித்திருந்தால் அதில் கால் வைக்கும்போது பிராணிகளிடம் சிறு கீறல் இருந்தால் கூட leptospirosis எனப்படும் எலிக்காய்ச்சல் உண்டாகும்.” என்று மழைக்காலத்தில் ஏற்படும் நோய்கள் குறித்துக் கூறியவர் பிராணிகளை எவ்விதம் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கினார்.

“மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் ஆகவே ஈரமான தரையில் படுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும். பிராணிகளின் ரோமங்களை சீப்பு கொண்டு சீவுவதால் பூஞ்சைகள் தங்காது. உன்னி, தெள்ளுப்பூச்சிகளுக்கான தடுப்பு மருந்துகள் இருக்கின்றது. அதனைக் கொண்டு நாயை மட்டுமின்றி அது வசிக்கும் இடத்தையும் முற்றிலுமாக சுத்தம் செய்ய வேண்டும். 

BRACHYCEPHALIC வகை நாய்களிடம் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சிறிய பிரச்சனைகள் வந்தால் கூட மருத்துவரை அணுகுவது நல்லது. ஈ, கொசுக்கள் இல்லாதபடி கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நிறைய ரோமங்கள் உள்ள பிராணிகளுக்கு அடிபட்டிருந்தால் அந்தப் புண் வெளியே தெரியாது. எனவே ரோமங்களை விலக்கி புண் ஏதேனும் இருக்கிறதா என்று அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும். 

எங்கும் தண்ணீர் தேங்க விடாமலும், குப்பைக்கூளங்கள் இல்லாமலும் வீட்டை பராமரிக்க வேண்டும். பிராணிகள் சாப்பிடாமலிருத்தல், சிறுநீரில் ரத்தம் வருதல், மஞ்சள் காமாலை ஆகியவை எலிக்காய்ச்சலின் அறிகுறிகள். எலிக்காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் இருக்கிறது. இந்த அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை அணுக வேண்டும். பிராணிகளை இரண்டு வாரத்திற்கு ஒருமுறைதான் குளிப்பாட்ட வேண்டும்.

மனிதர்களுக்கு இருப்பது போல் வியர்வை சுரப்பிகள் பிராணிகளுக்கு இல்லை. அதற்கு பதிலாக அதன் உடலின் வெளிப்புறம் sebum என்ற சுரப்பி மூலம் சூழப்பட்டிருக்கும். அடிக்கடி குளிப்பாட்டும்போது சூழ்ந்திருக்கும் சுரப்பி நீர்த்துப் போய்விடும். பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களால் தோல் நோய் உள்ள பிராணிகளை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் குளிப்பாட்ட வேண்டும்.” என்றவர் பிராணிகளுக்கான உணவுமுறைகள் குறித்தும் கூறினார். 

 “வழக்கத்தை விட அதிகமாக உணவில் சத்தான பொருட்களை சேர்த்துக் கொடுக்க வேண்டும். சேமிக்கப்பட்ட உணவாக இருந்தால் அவற்றினுள் பூஞ்சைகள் இருக்கிறதா என்பதை நன்கு பரிசோதித்து, பூஞ்சைகளை அகற்றிய பின்னரே கொடுக்க வேண்டும். குளிரான தட்பவெப்பநிலையில் வெதுவெதுப்பான உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும். நன்கு வேகவைத்த மாமிசங்களை மட்டுமே கொடுக்க வேண்டும். அரை குறையாக வெந்த மாமிசத்தைக் கொடுத்தால் குடற்புழுக்கள் உண்டாகும். பிராணிகளுக்கு அலர்ஜியான உணவு எது? என்பதைக் கண்டறிந்து அதனை தவிர்க்க வேண்டும்.” என்கிறார் செல்வநாதன். 

- கி.ச.திலீபன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow