ஹர்திக் பாண்டியா அதிரடி.. மழைக்கு இடையில் இந்தியா வெற்றி..
India vs Sri Lanka Match Highlights in Tamil : இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், இந்திய அணி டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
India vs Sri Lanka Match Highlights in Tamil : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த டி20 சாம்பியன் கோப்பையை வென்று கொடுத்த கையோடு, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார். இதனால், இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார்.
அதேபோல், விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனையடுத்து இந்திய டி 20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வாகியுள்ளார். இதனையடுத்து நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணியின் இளம்படை 213 ரன்கள் குவித்ததால், 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், 2ஆவது டி20 போட்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து, இலங்கை பேட்டிங்கிற்கு களம் புகுந்தது. இலங்கை அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இதனால், பவர்பிளே ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது.
குஷல் மெண்டிஸ் 10 ரன்களிலும், பதும் நிசங்கா 32 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் 26 ரன்களிலும் வெளியேறினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குஷல் பெரேராவை ஹர்திக் பாண்டியா வெளியேற்றினார். குஷல் பெரேரா 34 பந்துகளில் [6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 53 ரன்கள் எடுத்தார்.
பின்னர், களமிறங்கிய தசுன் ஷனகா 0, வஹிந்து ஹரசங்கா 0, சரித் அசலங்கா 14, மஹீஷ் தீக்ஷனா 2, ரமேஷ் மெண்டிஸ் 12 என சொற்ப ரன்களில் வெளியேற இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளும், அக்ஷர் பட்டேல், அர்ஷதீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. முதல் 3 பந்துகள் வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால், மழைவிட நேரமானதால், டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 8 ஓவர்களில் 78 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே தீக்ஷனா பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த பேட்டர்கள் ஓவருக்கு 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் அதிரடியாகவே ஆடினர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் [3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 30 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 12 பந்துகளில் [4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்] 26 ரன்கள் எடுத்து பதீரனா பந்துவீச்சில் வெளியேறினார். ஒரு முனையில் 9 பந்துகளையே சந்தித்த ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 22 ரன்கள் எடுத்தார்.
இதனால், இந்திய அணி 6.3 ஓவர்களில் 81 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிப்பதோடு கோப்பையையும் கைப்பற்றியது. 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
What's Your Reaction?