இந்த இரண்டிலும் சொதப்பி விட்டேன் - தோல்வி குறித்து ரோஹித் ஓபன் டாக்
அணியை வழிநடத்துவதிலும், பேட்டிங்கிலும் தான் சிறப்பாக செயல்படவில்லை என்று நியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருந்தது.
இந்த நிலையில் 3ஆவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக டேரல் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 263 ரன்கள் எடுத்தது. கடந்த ஒரு ஆண்டுகளாக சரியாக பெர்ஃபார்மன்ஸ் செய்யாத விராட் கோலி, இந்த போட்டியிலும், 4 ரன்களில் வெளியேறினார். அதிகப்பட்சமாக, சுப்மன் கில் 90 ரன்களும், ரிஷப் பண்ட் 60 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர், 28 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, 174 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்ஸை போலவே, இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 147 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ரோஹித் சர்மா (11), சுப்மன் கில் (1), விராட் கோலி (1), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (5), சர்ஃப்ராஸ் கான் (1) என அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரிஷப் பண்ட் மட்டும் 64 ரன்கள் எடுத்து சிறிது தாக்குப் பிடித்தார். நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 121 ரன்களுக்கு ஆட்டமிழந்து சொந்த மண்ணில் படுதோல்வியை தழுவியது.
இந்திய அணியின் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், உள்நாட்டில் மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை ஒயிட் வாஷ் ஆனது கிடையாது. முதல் முறையாக உள்நாட்டில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது.
இதற்கு முன்னதாக இரண்டு முறை மட்டுமே உள்நாட்டில் ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. 2000ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கிலும், 1980ஆம் ஆண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 1-0 என்ற கணக்கிலும் தோல்வியை தழுவியுள்ளது. மேலும், 1983ஆம் ஆண்டிற்கு பிறகு 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததையும், டெஸ்ட் தொடரை இழந்ததையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. எளிதில் ஜீரணிக்க முடியாத ஒன்று. நாங்கள் எங்களது சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. நியூசிலாந்து அணி தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியது.
நாங்கள் நிறைய தவறுகள் செய்துவிட்டோம். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸிலும் போதுமான ரன்களை குவிக்க தவறிவிட்டோம். ஆனால், இந்த போட்டியில் 30 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தோம். வெற்றி பெறக்கூடிய இலக்கு இருந்தபோதும், குழுவாக தோல்வி அடைந்துள்ளோம்.
இது ஒரு துரதிர்ஷ்டவசமான டெஸ்ட் தொடர். நாங்கள் சில விஷயங்களை முயற்சித்தோம்; ஆனால், சரியாக வெளிக்கொண்டு வர இயலவில்லை. அணியை வழிநடத்துவதிலும், பேட்டிங்கிலும் கேப்டனாக நான் சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு குழுவாக செயல்படத் தவறிவிட்டோம்” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?