Indian Cricketer Natarajan Emotional Speech : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு தின விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை நடராஜன் வழங்கினார்.
அப்போது, கிரிக்கெட் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் மாணவர்களுடன் பந்து வீசியும், பேட்டிங் செய்தும் நடராஜன் உற்சாகப்படுத்தினார். நடராஜனுக்கு ஏராளமானவர்கள் தாங்கள் கைப்பட வரைந்த அவருடைய ஓவியத்தை பரிசாக அளித்தனர்.
பின்னர் மேடையில் பேசிய நடராஜன், “விளையாட்டு மற்றும் படிப்பு இரண்டுமே எல்லோருக்கும் வாழ்க்கையில் முக்கியமானது. படிப்பு வாழ்க்கையில் உங்களை மேலே கொண்டு செல்லும். விளையாட்டு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். தற்போது உள்ள குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டாமல், செல்போனில் அதிக நேரம் செலவிடுவதால் உடல் ஆரோக்கியத்தை இழந்து விடுகிறார்கள். அவர்களின் எண்ணங்கள் எல்லாம் சிதறி விடுகின்றன.
விளையாடுவது மூலம் குழந்தைகளுக்கு நேர்மையான சிந்தனை வளரும். கிராமத்தில் இருந்து ஒருவர் வர முடியும் என்பதற்கு முன் உதாரணமாக நான் இருக்கிறேன். எங்கே இருந்தாலும் உங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நீங்க நம்பினால் மட்டும்தான் மேல வர முடியும். முன்பு விளையாட்டு மூலம் வாய்ப்புகள் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருந்தார்தகள். ஆனால், இன்றைக்கு அனைத்து துறைகளிலும் விளையாட்டுக்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகு எனக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது. நான்கு வருடங்கள் கிரிக்கெட்டில் தோல்வி அடைந்து இருக்கிறேன். அப்போதும் நான், மனம் வலிமையுடன் விளையாடி இருக்கிறேன். ஒரு விளையாட்டு வீரருக்கு உடம்பில் கத்தி பட்டுவிட்டால், மீண்டும் பழைய உடம்பை கொண்டு வருவதற்கு மன வலிமை மிக அவசியம். நான் வீழ்ந்தாலும், உடனே ஒரு வெற்றியை கொடுப்பதற்கு மன வலிமை தான் காரணம்.
எனக்கு கிரிக்கெட் தவிர வேறு ஏதும் தெரியாது. கிரிக்கெட்டில் சாதிக்க முடியாமல் போனால், கூலி வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என நினைத்திருந்தேன். கிரிக்கெட் மீது இருந்த காதல் காரணமாக, கஷ்டம் தெரியாமல் போனது. நாம் நேசிக்கின்ற ஒரு விஷயத்திற்காக உண்மையாக, நேர்மையாக ஆக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்” என்றார்.