Hardik Pandya : வெகுண்டெழுந்த ஹர்திக் பாண்டியா.. அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி
Hardik Pandya : வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Hardik Pandya : இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி, இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சொதப்பலான ஆட்டத்தால், பவர்பிளே ஓவர்களில் 2 விக்கெட்டுகளுக்கு 39 ரன்கள் எடுத்தது.
பர்வேஷ் ஹொசைன் எமோன் 8 ரன்களிலும், லிட்டன் தாஸ் 4 ரன்களிலும், வெளியேறினார். இருவரையும் அர்ஷ்தீப் சிங் வெளியேற்றினார். அடுத்தடுத்து வங்கதேச வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அதிகப்பட்சமாக மெஹிதி ஹசன் மிராஷ் 35 ரன்களும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 27 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் மற்றும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஹர்திக் பாண்டியா, மயங்க் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சம்ரா இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர், அபிஷேக் சர்மா 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், வங்கதேச பந்துவீச்சை துவம்சர் செய்தார். அவர், 14 பந்துகளில் [3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்] 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். சஞ்சு சாம்சனும் தனது பங்கிற்கு, 19 பந்துகளில் [6 பவுண்டரிகள்] 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதற்கிடையில், களமிறங்கிய முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய ஹர்திக் பாண்டியா தொடர்ந்து வாண வேடிக்கை காட்டினார். அதிலும் குறிப்பாக ரிஷத் ஹொசைன் பந்திவீச்சில் கவர் திசையில் அடித்த அந்த சிக்ஸர் எல்லாம் அநாசியமாக இருந்தது. அதேபோல், 12ஆவது ஓவரில், தொடர்ந்து 2 பவுண்டரிகள் அடித்த பாண்டியா, அடுத்த பந்தையும் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இறுதியில் இந்திய அணி 11.5 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. வெறும் 16 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்டியா [5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 39* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த டி20 போட்டி அக்டோபர் 9ஆம் தேதி [புதன்கிழமை] நடைபெற உள்ளது.
கடந்த ஐபிஎல் 2023 தொடரில், ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவித்ததும், ஹர்திக் பாண்டியா(Hardik Pandya) அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மும்பை இண்டியன்ஸ் அணி களமிறங்கும் போதெல்லாம், மும்பை ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அதே சமயம், நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி சாம்பியன் பட்டம் பெற்றது. இதன் இறுதிப்போட்டியில், அபாரமாக செயல்பட்ட ஹர்திக் பாண்டிய கடைசி ஓவரை சிறப்பாக வீசியதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு கோப்பையையும் கைப்பற்றியது.
இதனையடுத்து, இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் (IPL 2025 Mega Auction), ஹர்திக் பாண்டியாவை மீண்டும் தக்கவைக்க, மும்பை இண்டியன்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஹர்திக் பாண்டியா தனது இருப்பை மீண்டும் நிரூபித்துள்ளார்.
What's Your Reaction?






