சிக்ஸர்களை பறக்கவிட்ட சஞ்சு சாம்சன்.. சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Nov 9, 2024 - 20:14
Nov 9, 2024 - 20:41
 0
சிக்ஸர்களை பறக்கவிட்ட சஞ்சு சாம்சன்.. சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா
இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நேற்று வெள்ளிக்கிழமை அன்று [08-11-24] முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான சஞ்ச சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சஞ்ச சாம்சன் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மேலும், 50 பந்துகளில் 107 ரன்கள் [7 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள்] எடுத்து பீட்டர் பந்துவீச்சில் வெளியேறினார். சர்வதேச டி20 அரங்கில் தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் 111 ரன்கள் எடுத்திருந்தார்.

மேலும், நேற்று வாணவேடிக்கை காட்டிய சஞ்சு சாம்சன், 10 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம், தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் ரில்லீ ரூசோவ், சூர்யகுமார் தலா 8 சிக்சர்கள் அடித்திருந்தனர்.

ஆனால், மற்ற பேட்ஸ்மேன்கள் அவருக்கு சிறந்த பாட்னர்ஷிப்பை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. திலக் வர்மா (33 ரன்கள்) மட்டும் சிறிதுநேரம் நிலைத்து நின்று ஆடினார். அபிஷேக் சர்மா (7), சூர்யகுமார் யாதவ் (21), எடுத்து வெளியேறினார்.

ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும், ரிங்கு சிங் 11 ரன்களிலும், அக்சர் படேல் 7 ரன்களிலும் வெளியேறி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜெரால்ட் கோட்சே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில், முதல் ஓவரிலேயே எய்டன் மார்க்ரம் 8 ரன்களில் அர்ஷதீப் சிங் பந்தில் வெளியேறினார். தொடர்ந்து ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (11) ஆவேஸ் பந்துவீச்சில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரியான் ரிக்கெல்டன் (21), ஹென்ரிச் கிளாசன் (25), டேவிட் மில்லர் (18) ஆகிய முக்கியமான 3 வீரர்களையும் வருண் சக்கரவர்த்தி அட்டகாசமாக வெளியேற்றினார்.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி 17.5 ஓவரில் 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இதன் மூலம் 61 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்டநாயகன் விருதினை சஞ்சு சாம்சன் தட்டிச் சென்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow