சட்டென மாறிய வானிலை.. தமிழ்நாட்டின் பல இடங்களில் கொட்டும் மழை... சென்னையில் வெப்பம் தணிந்தது!

சென்னை புறநகர் பகுதிகளான செங்குன்றம், ஆவடி பகுதிகளிலும் மழை கொட்டியது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

Jul 11, 2024 - 08:28
Jul 11, 2024 - 15:55
 0
சட்டென மாறிய வானிலை.. தமிழ்நாட்டின் பல இடங்களில் கொட்டும் மழை... சென்னையில் வெப்பம் தணிந்தது!
rain in tamilnadu

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் வெயில் கடுமையாக கொளுத்தியது. பொதுவாக வெயில் காலத்தில் குளுமையாக இருக்கும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களிலும் 30 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலை வாட்டியது. 

கடும் வெயிலில் இருந்து விடிவுகாலம் பிறக்காதா? என மக்கள் ஏங்கித் தவித்து வந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 10.07.2024 மற்றும் 11.07.2024 ஆகிய 2 நாட்கள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியிருந்தது. 

அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் கடுமையாக கொளுத்திய நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களாக விட்டு, விட்டு பரவலாக மழை கொட்டி வருகிறது. 

நேற்று இரவும் புரசைவாக்கம், எழும்பூர் உள்பட நகரின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான செங்குன்றம், ஆவடி பகுதிகளிலும் மழை கொட்டியது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

கொடைக்கானலில் செண்பகனூர், கீல் பூமி, ஆனந்தகிரி, அப்சர்வேட்டரி, கல்லுக்குழி, மூஞ்சிக்கல், நாயுடுபுரம் ஆகிய பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. திண்டுக்கல் நத்தம் பகுதியில் 1 மணி நேரம் கொட்டிய மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தஞ்சாவூரில் திருக்கானூர் பட்டி, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், வல்லம், திருமலை சமுத்திரம், திருக்கானூர் பட்டி, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 8 செ.மீ மழை பெய்துள்ளது. செங்குன்றம், ஆவடியில் தலா 7 செ.மீ மழை காட்டியுள்ளது. சோழவரம், தாமரைப்பாக்கத்தில் தலா 5 செமீ, பூண்டி, ஊத்துக்கோட்டையில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் பூவிருந்தவல்லி, திருவள்ளூர், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு தலா 2 செ.மீ மழையும், ஜமீன் கொரட்டூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டியில் தலா 1 செமீ மழையும் பதிவாகியுள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow