இதுக்கு ஒரு விடிவுகாலமே இல்லையா?.. புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் மாறி, மாறி கடிதம் எழுதிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்களே தவிர, இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட இதுவரை எந்த நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களை கைது செய்தனர்.
மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்பு மீனவர்களை இலங்கை கடற்படையினர் இலங்கையின் ஊர்க்காவல் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. அதுவும் கடந்த சில மாதங்களாக நமது மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, படகுளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது.
கடந்த 25ஆம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்கள் அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் கடந்த மாதம் இறுதியில் ராமேஸ்வரத்தின் பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்கள் கைது செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் நான்கு நாட்டுப்படகுகளையும் சிறைபிடித்தனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தினார்கள்.
இப்படியாக தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும்போதும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை இந்திய அரசு கண்டிக்க வேண்டும். மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதுகிறார்.
இதற்கு பதில் கடிதம் எழுதும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ''தமிழ்நாடு மீனவர்களின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பாஜக அரசு பதவியேற்றது முதல் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறைந்துள்ளது'' என்று கூறுகிறார்.
இப்படியாக முதலமைச்சர் ஸ்டாலினும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் மாறி, மாறி கடிதம் எழுதிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்களே தவிர, இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்துக்கு முடிவுகட்ட இதுவரை எந்த நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையை முழுவதுமாக தடுத்து நிறுத்தி, மீனவர்களின் நலனை காக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் ஒரே குரலாக உள்ளது. இனியாவது மீனவர்களின் பிரச்சனைக்கு விடிவுகாலம் பிறக்குமா?
What's Your Reaction?