'2026 டார்கெட்'.. 'இளைஞர்கள் பலம்'.. எடப்பாடியின் மாஸ்டர் பிளான்.. நிர்வாகிகளிடம் பேசியது என்ன?
''கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாதம் இருமுறை மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். இளைஞர்களை அதிகளவில் கட்சியில் சேர்த்து அவர்களுக்கும் முக்கிய பொறுப்புகளில் வாய்ப்பளியுங்கள்''
சென்னை: மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதேபோல் தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது.
அதுவும் பல்வேறு தொகுதிகளில் படுதோல்வி அடைந்து நாம் தமிழர் கட்சிக்கு அடுத்த இடத்தில் சென்றது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியே கூறி இருந்தார்.
மக்களவை தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து தொகுதிவாரிய ஆலோசனை கூட்டம் நடத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார். அதன்படி தேர்தல் முடிவுகள் குறித்து சென்னை ராயபபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
காஞ்சீபுரம் மற்றும் ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதால் அந்த தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், அதிமுக தோல்வி அடைந்த காரணம் குறித்து நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டார். அப்போது பெரும்பாலான நிர்வாகிகள், ''மக்களவை தேர்தலில் வலுவான கூட்டம் அமையாததே தோல்விக்கு முதல் காரணம். இது தவிர திமுக அரசின் மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து திட்டம் போன்ற திட்டங்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றதால், அதிமுகவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை'' என்று கூறியுள்ளனர்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி, 'நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் நமக்கு சாதகமாக இல்லை' என கூறியபோது, '2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும்' என நிர்வாகிகள் அவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ''2026 சட்டப்பேரவை தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும். பாஜகவுடன் கூட்டணி இல்லை. புதிய கூட்டணி அமைப்பதை தலைமை பார்த்துக் கொள்ளும். நீங்கள் சட்டப்பேரவை தேர்தலை வலிமையுடன் எதிர்கொள்ள இன்று இருந்தே தயாராக வேண்டும். எங்கெங்கே பிரச்சனை இருக்கிறதோ அதை உடனே கண்டறிந்து செய்யுங்கள்'' என்று உத்தரவிட்டார்.
மேலும் ''கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாதம் இருமுறை மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். இளைஞர்களை அதிகளவில் கட்சியில் சேர்த்து அவர்களுக்கும் முக்கிய பொறுப்புகளில் வாய்ப்பளியுங்கள்'' என மாவட்ட செயலாளர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது சில நிர்வாகிகள், ''கட்சியில் புதிதாக யாரையும் சேர்க்க வேண்டாம். இப்போது இருக்கும் நிலையே தொடரட்டும்'' என்று பேசியபோது, எடப்பாடி பழனிசாமி பதில் ஏதும் பேசாமல் அமைதியாக கேட்டதாக கூறப்படுகிறது.
அதே வேளையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகா உள்ளிட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது தொடர்பான விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஏதும் பேசப்படவில்லை என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
What's Your Reaction?