வெள்ளை சட்டை.. தலையில் குல்லாவுடன் விஜய்.. நெகிழ்ச்சியில் இஸ்லாமியர்கள்
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். மேலும், அங்கு இஸ்லாமியர்களுடன் இணைந்து சிறப்புத் தொழுகையில் பங்கேற்று நோன்புக் கஞ்சி குடித்தார். இந்த நிகழ்ச்சியில் 3,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கட்சி சார்பில் யாரும் பெரிய அளவில் கலந்து கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல், தவெக கட்சி கொடிகளும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட சில கட்சி தலைவர்களே கலந்து கொண்டனர்.
தவெக தலைவர் விஜய் வருவதை அறிந்த ரசிகர்கள் பலரும் ஒய்எம்சிஏ மைதானத்தில் குவிந்தனர். அப்போது, ரசிகர்கள் அங்கு போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைந்தனர். அவர்களை பவுன்சர்கள் தடுக்க முயன்றபோது, ரசிகர்களுக்கும், பவுன்சர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு சிறிது நேரத்திலேயே அவர்களை பவுன்சர்கள் கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளை சட்டை.. தலையில் குல்லா
நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், வெள்ளை சட்டை மற்றும் குல்லாவுடன் கலந்து கொண்டார். பின்னர், இஸ்லாமியர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, "என் நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்களே. மாமனிதர் நபிகள் நாயகம் வாழ்க்கையை பின்பற்றுவோம். மனிதநேயம், சகோதரத்துவத்தையும் பின்பற்றுவோம். என் அன்பான அழைப்பை ஏற்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றி” என்று கூறினார்.
இஃதார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முடிந்து புறப்பட்டபோது விஜயை பார்த்து ரசிகர்கள் தலைவா.. தலைவா.. என்று கத்தினர். மேலும், திறந்து வேனில் ஏறிய விஜய், அங்கு ரசிகர்களை பார்த்து சையசைத்தபடி புறப்பட்டு சென்றனார். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இஃப்தார் நோன்பு திறப்புக்கு முன்பே போக்குவரத்து நெரிசல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






