இயக்குநர் ராஜு முருகன் மனைவியை டார்ச்சர் செய்த நிர்வாகிகள்.. கேள்வி எழுப்பியதால் ஆத்திரம்
பாலியல் குற்றச்சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பியதால் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக இயக்குநர் ராஜு முருகன் மனைவி ஹேமா, காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

குக்கூ, ஜோக்கர், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் ராஜுமுருகன். ஜோக்கர் படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அடுத்ததாக நடிகர் சசிக்குமாரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குநர் ராஜு முருகன் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஹேமா சின்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இயக்குநர் ராஜு முருகன் தன் குடும்பத்துடன் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அய்யப்பன்தாங்கல் பகுதியில் கேட்டட் கம்யூனிட்டி என்ற வகையான அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி வசித்து வருகிறார்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 2,163 வீடுகள் இருக்கின்றன. சினிமாவின் பிரபல நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் இந்த அடிக்குமாடி குரியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் சில பாலியல் ரீதியான குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக இயக்குநர் ராஜுமுருகனின் மனைவி ஹேமா அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் முறையிட்டுள்ளார்.
குறிப்பாக ஐயப்பன் தாங்கலில் உள்ள பிரெஸ்டிஜ் பெல்லா விஸ்டா என்ற குடியிருப்பில் கடந்த ஆண்டு புதிதாக வீட்டு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர். இவர்கள்தான் இந்த 2,163 வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளை பராமரித்து வருகின்றனர். பிரபலங்கள் பலர் இந்த குடியிருப்பில் வசித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அதற்கு தேவையான கட்டணங்களையும் வசூல் செய்து பராமரித்து வருகின்றனர்.
சங்க தலைவரான மரியா ஷங்கர் என்பவரும் செயலாளராக கௌரி சங்கர் மற்றும் பல அலுவலக நிர்வாகிகள் அங்கிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அங்கிருக்கும் குடியிருப்பு வாசிகளிடம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்புத் தொகை வசூலிக்கப்பட்டாலும் முன்கூட்டியே பராமரிப்பு முன் தொகை கொடுக்க வேண்டும் என பணத்தை முறைகேடாக வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் மனைவியான ஹேமா குடியிருப்பில் நடக்கும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியதாலும், பராமரிப்பு முன் தொகை அளிக்க முடியாது என்று தெரிவித்ததாலும் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஹேமா புகார் அளித்துள்ளார்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை சுமார் 22,000 ரூபாய் பராமரிப்பு தொகை கொடுக்கப்பட்டும் தன்னுடைய வீட்டிற்கு மட்டும் 20 நாட்களுக்கு மேலாக குப்பைகளை அல்லாமல் இருப்பது மின்சார பிரச்சனை ஏற்பட்டால் சரி செய்யாமல் தவிர்ப்பது, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் நீச்சல் குளம் உள்ளிட்டவற்றை தனது குழந்தைகளை பயன்படுத்த விடாமல் தடுப்பது, ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியே சென்று வரும் பொழுது மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது என தொடர்ந்து இயக்குநரின் மனைவி ஹேமாவிற்கு தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குநர் குடும்பத்தினர் முறையாக பராமரிப்பு தொகை செலுத்தவில்லை என்று பொய்யான தகவல்களை மற்ற குடியிருப்பு வாசிகளுக்கு தெரிவித்து அவர்களைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் இதன் காரணமாக மற்ற குடியிருப்பு வாசிகளை , தன் குடும்பத்திற்கு எதிராக சங்க நிர்வாகிகள் திருப்புவதற்கு அவதூறு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 9 மாதங்களாக இது போன்ற மன உளைச்சலையும், தொந்தரவுகளையும் சமாளித்து வந்த நிலையில் இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்தால் பிரபலங்கள் குடியிருக்கும் குடியிருப்புகள் என்பதால் நிர்வாகிகள் அவர்களை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுப்பதாகவும் இயக்குநர் மனைவி ஹேமா குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், ஹேமா, தமிழக முதலமைச்சர் மற்றும் ஆவடி காவல் ஆணையருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஆர்.எம்.சி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
குறிப்பாக பிரெஸ்டிஜ் பி பெல்லா விஷ்டா அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சங்க தலைவர் மரியா ஷங்கர், செயலாளர் கௌரி சங்கர் மற்றும் அலுவலக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சங்கத்திற்கு நிதியாக 13 கோடி ரூபாய் அளவிற்கு பணம் இருப்பதாகவும், அதையும் தாண்டி விதிகளை மீறி பராமரிப்புத் தொகைகளை வசூலிப்பதாகவும் குறிப்பிட்ட சிலர், சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து ஒட்டுமொத்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளையும் கட்டுப்பாட்டில் வைத்து அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் குழந்தைகள், பெண்கள் என பிரபலங்கள் வசித்து வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் எதிராக சங்க நிர்வாகிகள் கொடுக்கும் மன உளைச்சல் மற்றும் தொந்தரவுகள் குறித்து சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜு முருகனின் மனைவி ஹேமா போலீஸாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
What's Your Reaction?






