மொழிப்போர் தியாகிகள் தினம்: தாளமுத்து, நடராசன் நினைவிடம் திறப்பு
மொழிப்போரில் உயிர்நீத்த தாளமுத்து, நடராசன் இருவரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
கடந்த 1937-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு முதலமைச்சராக பதவியேற்ற சி.ராஜகோபாலாச்சாரி கட்டாய இந்தி குறித்து கூட்டம் ஒன்றில் பேசினார். தொடர்ந்து, 1938-ஆம் ஆண்டு பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைக் கற்பிப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தனித் தமிழ் இயக்கங்களும், பெரியாரும் பெரும் போராட்டங்களை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். இருந்தாலும், தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். 1965-ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. பல உயிர்களை காவு வாங்கிய அந்த போராட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக பிரமுகர் நாகேந்திரனின் இரண்டாவது மகனை தேடும் போலீஸார்
மேலும், இந்த போராட்டம் மிகவும் தீவிரமடைந்து போராளிகள் மொழிக்காக தீக்குளித்து மாண்டனர். இந்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர் நீத்த திருவாளர்கள் நடராசன், தாளமுத்து இருவரின் தியாகத்தைப் போற்றும் வகையில் நினைவிடத்தை சென்னை, மூலக்கொத்தளத்தில் தந்தை பெரியார், அடிகோலி திறந்துவைத்தார்.
இந்த நினைவிடத்தினைப் பொலிவேற்றம் செய்திடவும், ஜனவரி 25-ஆம் நாளை தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள் என்னும் பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை மிண்ட் மூலக்கொத்தளம் மயானத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்று உயிர் நீத்த தியாகிகள் தாளமுத்து, நடராஜன் இருவரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் உருவப் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?