நீதிமன்ற தண்டனை சட்டவிரோதமானது.. ஹெச்.ராஜா மேல் முறையீட்டு மனு தாக்கல்

பெரியார் மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளை பதிவு செய்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தலா ஆறு மாத சிறைதண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

Dec 17, 2024 - 17:51
 0
நீதிமன்ற தண்டனை சட்டவிரோதமானது.. ஹெச்.ராஜா மேல் முறையீட்டு மனு தாக்கல்
ஹெச்.ராஜா

கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, பெரியார் சிலையை உடைப்பேன் என்று சமூகவலைதளத்தில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும்  பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக ஈரோடு நகர காவல்துறை, மற்றும் கருங்கல்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி - எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன் விசாரணைக்கு வந்தது. இதில், பெரியார் சிலையை உடைப்பேன் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும்  எம்.பி. கனிமொழி மீதான கருத்து,  அரசியல் ரீதியான கருத்து என்றும் ஹெச்.ராஜா தரப்பில் வாதிடப்பட்டது. 

மேலும், இந்த விவகாரம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டிருந்தது.  இரு பதிவுகளும் ஹெச்.ராஜாவின் சமூக வலைதளப்பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை  உறுதி செய்த நீதிமன்றம் தலா ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.  

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து ஹெச். ராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருந்து ஐந்து மாதங்களுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தாமதத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,  மூன்றாம் நபர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நேரடி சாட்சியங்களோ, ஆதாரங்காளோ இல்லாததால் விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது சட்ட விரோதமானது எனவும், சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் முறையீட்டு வழக்கு முடிவிற்கு வரும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow