அந்தரங்க பாகத்தில் டாட்டூ.. லட்சத்தில் வருமானம்.. இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸார்
டாட்டூ கடை என்ற பெயரில் நாக்கை பிளவுப்படுத்தி வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே இளைஞர்கள் இருவர் 'ஏலியன் பாய்’ டாட்டூ கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு உடலில் வித்தியாசமாக டாட்டூ வரைந்து வந்த நிலையில் ட்ரெண்டிங்கிற்காக பாம்பு போன்று நாக்கை பிளவுப்படுத்தி அதை சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கண்களில் கலரிங் செய்வது போன்ற விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த சிலர் அவர்களிடம் சென்று தங்களது நாக்கை பிளவுப்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பான வீடியோவையும் அந்த இளைஞர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, திருச்சி மாநகர் சுகாதாரத்துறை அதிகாரி விஜயசந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் 'ஏலியன் பாய்’ டாட்டூ கடை நடத்தி வந்த இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அறுவை சிகிச்சை உபகரணங்கள், மயக்க மருந்துகள் ஆகியவற்றை இருவரும் எப்படி பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பாக மருத்துவத்துறை விசாரணையை மேற்கொண்டுள்ளது. இவர்கள் மீது ஏற்கனவே பொது சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவித்தல், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, பயிற்சி பெறாமல் மருத்துவம் பார்ப்பது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் விசாரணையின் அடிப்படையில் மேலும் வழக்குகள் பதிவு செய்ய மருத்துவத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸார் நடத்திய விசாரணையில், கை முதல் அந்தரங்க பாகங்கள் வரை டாட்டூ போட்டு மாதம் மூன்று லட்சம் வரை ஏலியன் பாய்ஸ் சம்பாதித்ததாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், சாதாரணமாக டாட்டூ போட மூன்றாயிரம் முதல் பத்தாயிரம் வரையும் உடலில் அந்தரங்க பாகங்களில் டாட்டூ போட 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையும் வசூல் செய்துள்ளனர்.
அவரது நண்பர்களுக்கு நாக்கை பிளவுபடுத்தும் சிகிச்சையை செய்து அதை தனது இன்ஸ்டாகிராம் ப்ரோமோக்காக பயன்படுத்தியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை மூன்று பேருக்கு இவர்கள் இது போன்ற நாக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
What's Your Reaction?