தமிழக அரசை கண்டித்து போராட்டம்.. போலீஸாரை அதிரவைத்த கூட்டம்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்கம் சார்பில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அகவிலைப்படி உயர்வை வழங்குவதாக அளித்த தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்ற தவறியதை கண்டித்து 500-க்கும் மேற்ப்பட்ட போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சென்னை பல்லவன் இல்லம் எதிரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
109 மாதங்களாக நிறுத்தப்பட்ட அகல விலைப்படி உயர்வை உடனடியாக வழங்கிடவேண்டும், ஏப்ரல் 2023-க்கு பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக வழங்கிடவேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வுத்திய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், அரசு இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததால் ஆத்திரமடைந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பொறுமையை இழந்து அரை நிர்வாணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தைத் தொடர்ந்து பல்லவன் இல்லம் முன்பு உள்ள சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த போராட்டத்தையொட்டி ஏராளாமான காவல்துறையினர் இந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
What's Your Reaction?