இறுதிகட்டத்தை எட்டிய விடாமுயற்சி.. மாஸ் லுக்கில் அஜித்.. வைரலாகும் புகைப்படம்

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.

Dec 17, 2024 - 19:36
Dec 17, 2024 - 19:39
 0
இறுதிகட்டத்தை எட்டிய விடாமுயற்சி.. மாஸ் லுக்கில் அஜித்.. வைரலாகும் புகைப்படம்
விடாமுயற்சி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், அர்ஜுன், ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. எப்போது ஃபர்ஸ் லுக் வரும்? எப்போது இரண்டாவது லுக் வரும் என சமூக வலைதளத்தில் கேள்விகளாக கேட்டு வந்தனர். பின்னர் ஒரு வழியாக படக்குழு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்சியில் ஆழ்த்தியது. 

கடந்த மாதம் யாரும் எதிர்பாராத விதமாக ‘விடாமுயற்சி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற்று வரும் நிலையில் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒரு புகைப்படத்தில் ஸ்டைலாக கோட் சூட் அணிந்து அஜித் நடந்து வருகிறார். மற்றொரு புகைப்படத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித், திரிஷா, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஆகியோர் இருக்கின்றனர். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். ‘மங்காத்தா’ திரைப்படத்திற்கு பிறகு அஜித், திரிஷா, அர்ஜுன் இணைந்து ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள்  மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow