திரைத்துறையில் அடுத்தடுத்த உயிரிழப்பு.. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்

தமிழ் திரையுலகில்  இரு பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சினிமா துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dec 19, 2024 - 20:23
Dec 19, 2024 - 20:26
 0
திரைத்துறையில் அடுத்தடுத்த உயிரிழப்பு.. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்
கோதண்டராமன் -சங்கர் தயாள்

கடந்த 2012-ஆம் ஆண்டு சங்கர் தயாள் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சகுனி’. இந்த படத்தில் கார்த்தி, ரோஜா, பிரகாஷ் ராஜ், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அரசியலை மையமாக வைத்து உருவான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து, 2016-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூடன்’ திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். தற்போது எட்டு ஆண்டுகள் கழித்து யோகி பாபு  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ திரைப்படத்தை சங்கர் தயாள் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ திரைப்படத்தின் புரோமோஷன் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இயக்குநர் சங்கர் தயாள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க காமெடி நடிகர் கோதண்டராமன் உயிரிழப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கோதண்டராமன், தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்தார். இவர் 'பகவதி’, ‘கிரீடம்’, ‘வேதாளம்’ உள்ளிட்ட படங்களில் துணை சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றினார். 

இவர் ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் பல படங்களில் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். இயக்குநர் சுதந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விமல், அஞ்சலி, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தை இன்று பார்த்தாலும் வயிறு குலுங்கும் அளவிற்கு இதன் காமெடிகள் இருக்கும். 

இந்த படத்தில் சந்தானத்தின் அடியாளாக பேய் என்ற கதாபாத்திரத்தில் கோதண்டராமன் நடித்திருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், நடிகர் கோதண்டராமன் உடல்நலக்குறைவால் பெரம்பூரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு திரைப்பிரபலங்கள் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow