சினிமா

Director Cheran Case : தனியார் பேருந்து ஹாரன் விவகாரம்... சேரனுக்கு ஆதரவாக செயல்படுகிறதா காவல்துறை..?

Director Cheran Case of Private Bus Honking : தனியார் பேருந்து தொடர்ச்சியாக ஹாரன் அடித்து வந்ததாக இயக்குநர் சேரன் நடு ரோட்டில் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலானது. இச்சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், போலீஸார் சேரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக தனியார் பேருந்து தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Director Cheran Case : தனியார் பேருந்து ஹாரன் விவகாரம்... சேரனுக்கு ஆதரவாக செயல்படுகிறதா காவல்துறை..?
இயக்குநர் சேரன்

Director Cheran Case of Private Bus Honking : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சேரன், தற்போது நடிப்பிலும் பிஸியாக காணப்படுகிறார். பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடி கட்டு, ஆட்டோகிராஃப், பொக்கிஷம் உட்பட மேலும் சில படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக சேரன் தான் ட்ரெண்டிங்கில் உள்ளார். அதாவது சேரன் தனது காரில் புதுச்சேரியில் இருந்து கடலூருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரின் பின்னால் சென்ற தனியார் பேருந்தில், அதன் ஓட்டுநர் தொடர்ச்சியாக ஹாரன் அடித்துக்கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் கடுப்பான இயக்குநர் சேரன்(Director Cheran), தனது காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தார். ஓரம் கட்ட இடமில்லாத சாலையிலும் பேருந்து ஓட்டுநர் தொடர்ச்சியாக ஹாரன் அடித்தபடி வந்ததால், சேரன்(Cheran) வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட, இந்த வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 2 நிமிடங்களுக்கும் மேலாக நிகழ்ந்த இந்த வாக்குவாதத்தால் அந்தப் பகுதியே பரபரப்பானது. முக்கியமாக இயக்குநர் சேரன் திரை பிரபலம் என்பதால், அவரை பார்க்க பொதுமக்கள் அதிகளவில் கூடியுள்ளனர். 

இதன் எதிரொலியாக, கடலூரில் ஏர் ஹாரன் பயன்படுத்தி வந்த 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளை போலீஸார் கணக்கு எடுக்கத் தொடங்கினர். மேலும், ஒவ்வொரு பேருந்துக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், கடலூர் - பண்ருட்டி தாலுகா பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கடலூர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதில், பயணிகளுடன் சென்ற பேருந்தை இயக்குநர் சேரன் நடுவழியில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டது தவறு. அவர் முறைப்படி காவல்துறையிலோ அல்லது போக்குவரத்து துறையிலோதான் புகார் அளித்திருக்க வேண்டும். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்ட சேரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். 

மேலும், தனியார் பேருந்துகளில் தற்பொழுது பயன்படுத்தப்படுவது எலக்ட்ரிக் ஹாரன் தான் எனவும், அதனால் அபராதம் விதிப்பதை காவல்துறையினர் நிறுத்த வேண்டும் என்றும் தங்களது புகாரில் கோரிக்கை விடுத்திருந்தனர். அதோடு சேரன் தடுத்து நிறுத்திய பேருந்தில் பதிவான இரண்டு சிசிடிவி காட்சிகளையும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே தனியார் பேருந்து தொழிலாளர்கள் சங்கம் சார்பிலும் சேரனுக்கு எதிராக கண்டனம் எழுந்துள்ளது. போக்குவரத்து காவல்துறையினர் இயக்குநர் சேரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். 

மேலும் படிக்க - தங்கலான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

அதேபோல், ஹாரன் விவகாரத்தில் இயக்குநர் சேரன் நடந்துகொண்டது, பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், தொழிலாளர்கள் சங்கத்தினருக்கும் இடையேயான பிரச்னையாக மாறி வருகிறது. இதற்கு இரண்டு தரப்பும் சேர்ந்து முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து இயக்குநர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “நான் செய்தது சரி என ஆதரவு தரும், தனியார் பஸ் டிரைவர்கள் ஹாரன் பயன்படுத்தும் விசயத்தில் உண்மையை எடுத்துச்சொல்லும் அனைவருக்கும் நன்றி. அதேநேரம் பஸ் உரிமையாளர்கள் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை, தவறான செய்தி.. கடலூரில் அரசு அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.