விசாரணைக் கைதிகளுக்கு அவசரகால விடுப்பு.. வழிகாட்டு விதிகளை வகுக்க உத்தரவு

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Dec 19, 2024 - 19:34
 0
விசாரணைக் கைதிகளுக்கு அவசரகால விடுப்பு.. வழிகாட்டு விதிகளை வகுக்க உத்தரவு
விசாரணைக் கைதிகளுக்கு அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தருமபுரியைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் தந்தை அருள் தாஸ்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  அதில், தனது மனைவி மரணமடைந்து விட்டதாகவும் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக தனது மகனுக்கு அவசர கால விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, மனுதாரரின் ஒரே மகன் என்ற அடிப்படையில் இறுதிச் சடங்கை சதீஷ் தான் மேற்கொள்ள வேண்டுமெனவும் அதனால் அவசரகால விடுப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

சிறைத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்  ஆர்.முனியப்பராஜ், மற்ற கைதிகளை போல விசாரணை கைதிகளுக்கு அவசரகால விடுப்பை சிறைத்துறை அதிகாரிகள் வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் அவர்கள் விசாரணை நீதிமன்றங்களை அணுகி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்ற விடுமுறை நாட்களில் விசாரணைக் கைதியின் தாய் அல்லது தந்தை உயிரிழந்தால் அவர்களால் இறுதிச் சடங்கில் எப்படி பங்கேற்க இயலும்? என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, விசாரணைக் கைதியின் தாய் அல்லது தந்தை உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்கும் வகையில், உரிய நிபந்தனைகளுடன் அவர்களை சிறைத்துறை அதிகாரிகளே அவசரக்கால விடுப்பில் அனுப்பும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow