சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் தனது வீட்டின் முன்பே நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை நகரில் அதுவும் காவல் நிலையம் அருகில் நடந்த இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம்மூலம் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டதாக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அண்ணாமலை, நாம் தமிழரின் சீமான் என பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் புன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் இன்று காலை போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மாதவரம் மாட்டுச்சந்தை பகுதியில் ஏரிக்கரை பின்புறம் இந்த என்கவுன்டர் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அதாவது போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள திருவேங்கடத்திடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் புழல் சிறைக்கு எதிரில் உள்ள வெஜிடேரியன் வில்லேஜ் என்ற பகுதியில், தான் துப்பாக்கியை மறைத்து வைத்து இருப்பதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். உடனே கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் அவரை அங்கு அழைத்து சென்றனர்.
அப்போது துப்பாக்கியை எடுத்த ரவுடி திருவேங்கடம் போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். இதில் ஒரு போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாகவும், இதனால் திருவேங்கடத்தை போலீசார் சுட்டுக்கொன்றதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் முக்கிய குற்றவாளி. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படையை திரட்டியதும், அவரை எங்கு வெட்டினால் உடனே இறப்பார்? என்ற திட்டங்களை தீட்டியதுடன், அதிக இடங்களில் ஆம்ஸ்ட்ராங்கை இவர் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.
2014ம் ஆண்டு குன்றத்தூரிலும், 2015 திருவள்ளூரிலும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
இதேபோல் சென்னை காவல் துறை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.