குகேஷால் நாடே பெருமை கொள்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

Dec 19, 2024 - 18:41
Dec 19, 2024 - 18:43
 0
குகேஷால் நாடே பெருமை கொள்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு
ஆர்.என்.ரவி-குகேஷ்

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனுடன் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் மோதினார். 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் முதலில் யார் ஏழரை புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்களே சாம்பியன் என்ற பட்டத்தை வெல்வர் என்ற விதிகளுடன் போட்டி தொடங்கியது. இதில், குகேஷ் மற்றும் டிங் லிரனுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

14-வது சுற்றின் 58-வது நகர்தலில் குகேஷ், சீன வீரர் டிங் லிரனை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றார். இதன்மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். அதுமட்டுமல்லாமல், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையும் படைத்தார். வெற்றி பெற்ற குகேஷுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 11 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. 

சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பிய குகேஷிற்கு சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம்  (டிசம்பர் 17) பாராட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட பல செஸ் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

விழாவில், உலக செஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் கொடுத்து குகேஷ் வாழ்த்து பெற்றார். பின்னர் மரத்தால் செய்யப்பட்ட செஸ் போர்ட்டை முதலமைச்சருக்கு பரிசாக வழங்கினார். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷிற்கு ஐந்து கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், தமிக ஆளுநர் ஆர்.என்.ரவி, குகேஷுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் வெங்கடாசலபதியின் தஞ்சாவூர் ஓவியத்தை பரிசளித்தார். தொடர்ந்து பேசிய ஆளுநர், இந்தியர்களுக்கு வெற்றியும், பெருமையும் குகேஷ் தேடி தந்துள்ளதாகவும், இவரால் நாடே பெருமை கொள்கிறது என்றும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow