Medical College Dean Issue : தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டீன் இல்லை... வெளியான அதிர்ச்சி தகவல்!

Medical College Dean Issue in Tamil Nadu : தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் டீன் இல்லாமல் செயல்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Oct 1, 2024 - 16:30
Oct 1, 2024 - 17:36
 0
Medical College Dean Issue : தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டீன் இல்லை... வெளியான அதிர்ச்சி தகவல்!
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை

Medical College Dean Issue in Tamil Nadu : தமிழகத்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அதிகளவு நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதற்கு அடுத்தப்படியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகம். இதனால், மருத்துவக்கல்வி வட்டாரத்தில் இந்த மருத்துவமனையில் டீன் ஆக இருப்பது, மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஏப்ரல் 30ம் தேதி மதுரை அரசு மருத்துவமனை டீன் ஆக இருந்த பேராசிரியர் ரெத்தினவேலு ஓய்வுப் பெற்றார். அதன்பிறகு தற்போது வரை புதிய டீன் நியமிக்கப்படவில்லை.

அவருக்கு பதிலாக பொறுப்பு டீன் ஆக பேராசிரியர் தர்மராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். அவரும், ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒய்வுப் பெற்றார். அவருக்குப் பதிலாக இருதவியல் துறை பேராசிரியர் மருத்துவர் செல்வராணி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பொறுப்பு டீன் ஆக நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களாக மதுரை அரசு மருத்துவமனை நிரந்தரமாக டீன் இல்லாமல் பொறுப்பு டீனை கொண்டு நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.  

இதுகுறித்து மருத்துவத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டீன் பணியிடம் காலியாக உள்ளதாக கூறியுள்ளார். இந்த பணியிடங்களை நிரப்ப டீன் பேனல் தயார்செய்ய வேண்டும் என்றும்; ஆனால், சுகாதாரத்துறை அலுவலகத்தில் டீன் பேனல் தயாரிப்பு மந்தமாக நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். டீன் பேனலில் வேண்டாதவர்களை புறக்கணித்து வேண்டியவர்களை திணிக்கப் பார்ப்பதாக கூறிய அவர், பேனல் வெளியிட்ட பின் சிலர் நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் டீன் நியமிக்கப்படாதது, பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று மருத்துவம், ஆனால், அதில் அரசு இவ்வளவு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மழைகால நோய் பரவல் அதிகரிக்கும் சூழலில் அரசு உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow