சென்னை: தொழில்நுட்ப பணிகள் காரணமாக 4 நாட்கள் பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு பாஸ்போர்ட் மிகவும் முக்கியமானதாகும். வெளிநாட்டில் இந்தியாவின் அடையாள அட்டையாக பாஸ்போர்ட் பயன்படுத்தப்படுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளிநாடு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கி வருகிறது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, அவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.
பாஸ்போர்ட் சேவைகளுக்காக www.passportindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழில்நுட்ப பணிகள் காரணமாக இந்தியா முழுவதும் இந்த இணையதளம் இன்று (20.09.2024) இரவு 8 மணி முதல் 23.09.2024 (திங்கள்கிழமை) காலை 6 மணி வரை செயல்படாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் மேற்கண்ட நாட்களில் இந்த இணையதளத்தை மக்கள் பயன்படுத்த முடியாது.
இது தொடர்பாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ். விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் (www.passportindia.gov.in) இன்று இரவு 8 மணி முதல் வரும் 23ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது.
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு இந்த 3 நாட்கள் பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்த முடியாது. எனவே, விண்ணப்பதாரர்கள் அப்பாயிண்ட்மெட்/ கேள்விகளுக்கு திட்டமிடப்பட்ட பராமரிப்புக்குப் பிறகு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்’’என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பல்வேறு மண்டலங்களின் அதிகாரிகளும் பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் பாஸ்போர்ட் சேவைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.