சினிமா

Vettaiyan Prevue: ”என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எமன் வந்துருக்கான்..” ஆக்ஷனில் மிரட்டும் வேட்டையன் டீசர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Vettaiyan Prevue: ”என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எமன் வந்துருக்கான்..” ஆக்ஷனில் மிரட்டும் வேட்டையன் டீசர்!
வேட்டையன் டீசர் வெளியானது

சென்னை: தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, இயக்குநர் தசெ ஞானவேல், அனிருத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னோட்டத்தையும் படக்குழு வெளியிட்டது. ரஜினியின் ஆக்ஷன் ட்ரீட்டாக உருவாகியுள்ள இந்த டீசர், ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே வைரலாகி வருகிறது. முக்கியமாக வேட்டையன் படத்தில் ரஜினி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ளார். ரஜினி யார்? அவரது கேரக்டர் என்ன என்று அமிதாப் பச்சன் அறிமுகம் செய்யும் காட்சியுடன் தொடங்கும் இந்த டீசரில், முழுக்க முழுக்க என்கவுன்டர் பற்றியே பேசியுள்ளார் இயக்குநர் தசெ ஞானவேல்.

முக்கியமாக வேட்டையன் டீசரில் இடம்பெற்றுள்ள “என்கவுன்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மட்டுமல்ல. இனி இப்படி நடக்கக் கூடாது என்பதற்காக எடுக்கும் முன்னெச்சரிக்கை” என ரஜினிகாந்த் பேசும் டயலாக் கவனம் ஈர்த்துள்ளது. வேட்டையனில் மரண தண்டனைக்கு எதிராக போராடும் ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக ரஜினி நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வெளியான டீசரில் ரஜினி என்கவுன்டருக்கு ஆதரவாக பேசியது போல காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால் படம் வெளியாகும் போது பல சர்ப்ரைஸ் டிவிஸ்ட்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி தவிர அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, துஷாரா விஜயன் ஆகியோரது கேரக்டர்கள் பற்றியும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தர்பார் படத்துக்குப் பின்னர் ரஜினிகாந்த் போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளது வேட்டையனில் தான். அதனால் வேட்டையன் படத்தில் ரஜினியின் ஆக்ஷன் காட்சிகள் தாறுமாறாக இருக்கும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். வரும் 10ம் தேதி சிங்கிளாக வெளியாகவுள்ள வேட்டையன், சூப்பர் ஸ்டாருக்கு கம்பேக் கொடுக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.