ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், ஆருத்ரா நிறுவனத்திற்கும் தொடர்பா? - செல்வபெருந்தகை வலியுறுத்தல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆரூத்ரா கோல்ட் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளாதா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

Jul 8, 2024 - 15:44
Jul 8, 2024 - 15:50
 0
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், ஆருத்ரா நிறுவனத்திற்கும் தொடர்பா? - செல்வபெருந்தகை வலியுறுத்தல்
Selvaperunthagai About Armstrong Assassination

சென்னை: பெரம்பூர் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெள்ளிக்கிழமை [05-07-24] இரவு அவரது வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.‌ இச்சம்பவத்தில் முதற்கட்டமாக 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலை பழிக்குப் பழியாக நடைபெற்றதாக கூறப்பட்டது. அதாவது ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்திற்கு பழிவாங்கும் படலமாக, ஸ்கெட்ச் போட்டு ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியதாக சுரேஷின் தம்பி புன்னை பாலா தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகில் வைத்து ஆற்காடு சுரேஷ் படுகாலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஆம்ஸ்ட்ராங் உதவியாலேயே ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது

ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு முன்னதாகவே சபதமிட்டு கொலை செய்ததாகவும், தனது அண்ணனின் பிறந்தநாளிலேயே நல்லபடியாக முடிந்தது என்று கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலா வாக்குமூலம் அளித்ததாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “காவல்துறையில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்க இருக்கிறார். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு அரசுக்கு களங்கம் விளைவிக்காத வகையில் குற்றங்கள் நடக்காமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கடந்த மூன்று நாட்கள் அசாதாரண சூழல் நிலவிய நிலையில் முதலமைச்சர் அடுத்து நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தங்க கடத்தல், ஊழல் எல்லாம் செய்யக் கூடியவர்கள் இருக்கும் கட்சியாக பாஜக இருக்கிறது.

ஆருத்ரா தங்க நகை விவகாரத்தில் முதல் குற்ற பத்திரிக்கை (FIR) தாக்கல் செய்தவருக்கு பாஜக, அவர்களது கட்சியில் பொறுப்பு வழங்கியுள்ளது. ஆருத்ரா கோல்ட் பெயர் நடைபெற்ற படுகொலையில் அடிபடுகிறது. கைது செய்யப்பட்டு இருக்கக்கூடியவர்களுக்கும் ஆருத்ரா கோல்டுக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை காவல்துறை தீர விசாரிக்க வேண்டும்.

ஒரு பக்கம் ஏஜென்சிகளை வைத்தும், மற்றொரு பக்கம் சமூக விரோதிகளை கட்சிக்குள் வைத்துக்கொண்டு எல்லோரையும் பாஜக பயமுறுத்துகிறது. பொறுப்புகள் இருக்கக் கூடியவர்கள் தாதாக்களாக இருக்கிறார்கள்.

தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகரான காவல்துறை என்று பேசியிருக்கிறோம். இந்த அடிப்படையில் நம்பிக்கை இருக்கிறது. யாரெல்லாம் இந்த விவகாரத்தில் பின்புலமாக இருக்கிறார்கள் என்பது குறித்து காவல்துறை விசாரிக்க வேண்டும்.

தங்க நிறுவனத்திடமும் விசாரிக்க வேண்டும். இது போன்ற பல கோணத்தில் விசாரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு இன்னும் உறுதியாக இருக்கவேண்டும். இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். இதே போல போதை பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow