ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நாகேந்திரனின் இரண்டாவது மகனை தேடும் போலீஸார்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நாகேந்திரனின் இரண்டாவது மகன் அஜித் ராஜை போலீஸார் தேடி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இந்த கொலை சம்பந்தமாக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... திருவேங்கடம் எண்கவுண்டர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக அரசு தயார்..!
இதில், முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது, மாதவரம் அருகே சென்று கொண்டிருந்த போது திருவேங்கடம் போலீஸாரை தாக்கிவிட்டு அவர்களது துப்பாக்கியை பிடுங்கி சுட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திருவேங்கடம் உயிரிழந்தார்.
தொடர்ந்து, கடந்த 7 -ஆம் தேதி நாகேந்திரன், நாகேந்திரனின் சகோதரர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட கத்திகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நாகேந்திரனின் இளைய மகனும் பாரதிய ஜனதா கட்சியில் இளைஞர் அணியில் பொறுப்பில் இருக்கும் அஜித் ராஜ் மீது வியாசர்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்ததை அறிந்த அஜித் ராஜ் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. மலர்கொடியின் மகன் கைது.. போலீசார் தொடர் விசாரணை..!
அவரை இரண்டு தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் ஏற்கனவே நாகேந்திரன் வீடு மற்றும் அவர்களது உறவினர் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை புளியந்தோப்புத் துணை ஆணையர், தனிப்படையினர் தீவிரமாக ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நேற்று நாகேந்திரன் சகோதரி கற்பகம் மற்றும் மைத்தூனர் சதீஷ் ஆகியோர் கந்துவட்டி வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?