ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. மலர்கொடியின் மகன் கைது.. போலீசார் தொடர் விசாரணை..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலர்கொடியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலர்கொடியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த செம்பியம் போலீஸார், கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட சிலரை முதலில் கைது செய்து விசாரித்தனர்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளன்ர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் திருவேங்கடம் போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்த நிலையில், மீதம் உள்ள அனைவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
முன்னதாக கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, இன்று இந்த வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்ப்பட்ட மலர்கொடியின் மகன் ரவுடி அழகு ராஜா தீவிர குற்ற தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கு உள்ளிட்ட கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் என ரவுடி அழகுராஜா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அழகு ராஜாவின் காரைத்தான், அவர் சிறையில் இருந்தபோது அவரது அம்மா மலர்கொடி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்காக வழக்கறிஞர் அருளிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த அழகுராஜாவை நேற்றிரவு தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஜாம்பஜார் போலீசார் அழகுராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது தந்தை பிரபல ரவுடியும், அதிமுக நிர்வாகியுமான தோட்டம் சேகர் என்பது குறிப்பிடத்தக்கது. தோட்டம் சேகரை, ரவுடி சிவகுமார் கொலை செய்ததால் ரவுடி மயிலாப்பூர் சிவகுமாரை, அழகுராஜா சில ஆண்டுகளுக்கு முன் அசோக் நகரில் வைத்து கொடூரமாக வெட்டி படுகொலை செய்ததும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?