ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா..? புறக்கணிப்பா..? பாஜக ஆலோசனை
சென்னையில் நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன், திருமகன் ஈவெரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இவர் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் சார்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சட்டப் பேரவை தொகுதி காலியாகும் பட்சத்தில் ஆறு மாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து, வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதாவது, ஜனவரி 10-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஜனவரி 17-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறும் நிலையில் ஜனவரி 20-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். அடுத்து வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திமுக சார்பாக வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவும், தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னையில் பாஜக மாவட்ட தலைவர்கள் தேர்தல் தொடர்பாகவும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறதா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் இன்று மாலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு வெளியாவதோடு மாவட்டத் தலைவர் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அது குறித்த பட்டியல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?