‘N Convention’ அரங்கம் இடிப்பு... நீதிமன்றத்தில் நிவாரணம் கோருவதாக நாகர்ஜுனா பதிவு!

ஐதராபாத்தில் குளத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான ‘என் கன்வென்ஷன்’ என்ற கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

Aug 25, 2024 - 01:56
Aug 25, 2024 - 15:03
 0
‘N Convention’ அரங்கம் இடிப்பு... நீதிமன்றத்தில் நிவாரணம் கோருவதாக நாகர்ஜுனா பதிவு!
நீதிமன்றத்தில் நிவாரணம் கோருவதாக நாகர்ஜுனா பதிவு

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமாக 'N Convention’ என்ற கட்டடம் உள்ளது. மாதப்பூரில் உள்ள இந்த 27,000 சதுர அடி கட்டடத்தில் சுமார் 3000 பேர் அமர்க் கூடிய வகையில் ஒரு பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. N Convention என்ற பெயரிலான இந்த அரங்கை N 3 என்டர்ப்ரைசஸ் கட்டியெழுப்பியது. இந்த N 3 என்டர்ப்ரைசஸ் நடிகர், தயாரிப்பாளர் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் நல்லா ப்ரீத்தம் இணைந்து நடத்தும் நிறுவனம் ஆகும். இந்த அரங்கில்தான் தற்போதைய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் மகளின் திருமண நிச்சயதார்த்தம், நடிகர்கள் வருண் தேஜ், லாவண்யா தம்பதி திருமண வரவேற்பு விழா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் குடும்ப நிகழ்வுகள் நடந்தன. சினிமா சூட்டிங்கும் நடக்கிறது. 

கடந்த சில ஆண்டுகளாகவே N Convention அரங்கம் தும்மிடிகுண்டா ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் மழை நீர் வடிகால் தடைபட்டு மழை பெய்யும் போதெல்லாம் 100 அடி சாலை, ஐயப்பா காலனி மற்றும் பிற பகுதிகள் வெள்ளக்காடாக ஆகின்றன என்ற புகார்கள் எழுந்து வந்தன. ஆனால் இதுகுறித்து நாகார்ஜுனாவிடம் இருந்து எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மொத்தம் 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அரங்கில் 10 ஏக்கருக்கு கட்டடங்கள் மட்டுமே உள்ளன. அதில், 3.12 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது 2014ம் ஆண்டே உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இந்த கட்டடத்தின் ஆக்கிரமிப்புகளை ஐதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 24) காலை இடித்து அகற்றியது. பெரிய ராட்சத இயந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள், அரங்கின் 35% கட்டுமானங்களை இடித்து தள்ளினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க: உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல்... தவிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்...

இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்ட நாகார்ஜுனா, “N-Convention அரங்கு சட்டவிரோதமான முறையில் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். அந்த நிலம் பட்டா நிலம். ஒரு அங்குல நிலம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. தனியார் நிலத்தின் உள்ளே கட்டப்பட்ட அந்த கட்டிடத்தை இடிக்க சட்டவிரோதமான முறையில் நோட்டீஸ் பிறப்பிக்க தடை உத்தரவு உள்ளது. ஆனால், தவறான தகவலின் அடிப்படையில் இன்று அந்த கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது. இன்று காலை கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அந்த கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே அதனை இடித்திருப்பேன். அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறான இந்த நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் தகுந்த நிவாரணத்தை நாங்கள் கோருவோம்” என தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow