Atishi: டெல்லியின் புதிய முதலமைச்சரானார் அதிஷி... அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் பதவிப் பிரமாணம்!
டெல்லியின் இளம் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி பதவியேற்றார். அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைக்க, டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி. அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதனையடுத்து வரும் 26, 27ம் தேதிகளில் டெல்லி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார் அதிஷி. இதன்மூலம் தலைநகரின் இளம் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி. டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், புதிய மதுபானக் கொள்கை வழக்கில் கைதாகி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. அதேநேரம் உச்சநீதிமன்றம் சென்று ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால், பல்வேறு நிபந்தனைகள் காரணமாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து டெல்லியின் புதிய முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் ஆம் ஆத்மியின் அதிஷியை முதலமைச்சராக அக்கட்சியினர் ஒரு மனதாக தேர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் அதிஷி.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற அதிஷி, ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து கோபால் ராய், கைலாஷ் கெலாட், முகேஷ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம்ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
2025 பிப்ரவரி மாதம் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் வரை மட்டுமே அதிஷி முதலமைச்சர் பதவியில் இருப்பார் என சொல்லப்படுகிறது. இதனால் அதிஷி குறுகிய நாட்கள் மட்டுமே முதலமைச்சராக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராகவும், தற்போது மம்தா பானர்ஜிக்குப் பின் நாட்டின் 2வது பெண் முதலமைச்சராகவும் அதிஷி பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அதிஷிக்கு ஆத் ஆத்மி கட்சியினர் உட்பட பல்வேறு அரசியல் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?