காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி.. கிரீஸ்மாவிற்கு தூக்கு தண்டனை விதிப்பு

காதலன் ஷரோனை குளிர்பானத்தில் விஷம் வைத்து கொன்ற காதலி கிரீஸ்மாவிற்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jan 20, 2025 - 12:24
Jan 20, 2025 - 12:30
 0
காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி.. கிரீஸ்மாவிற்கு தூக்கு தண்டனை விதிப்பு
குற்றவாளி கிரீஸ்மாவிற்கு தூக்குதண்டனை விதிப்பு

கேரளாவின் பாறசாலை அருகில் உள்ள மூரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷரோன். கல்லூரியில் படித்து வந்த இவர் ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு காதலியின் வீட்டிற்கு சென்ற ஷரோன்  வீட்டிற்கு வந்ததும் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரது பெற்றோர் ஷரோனை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவரது உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து உயிரிழந்தார்.

ஷரோன் சிகிச்சையில் இருந்தபோது அவரது ரத்தமாதிரிகள் சோதிக்கப்பட்டதில் அவரது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஷரோன் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிரீஸ்மா கைது செய்யப்பட்டார். நெடுமங்காடு போலீஸ் நிலையத்தில் அவர் விசாரணையில் இருந்தபோது அங்குள்ள கழிவறையில் இருந்த கிருமிநாசினியைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், காதலி வீட்டில் மாம்பழச்சாறும், கசாயமும் ஷரோன் குடித்துள்ளார். கசாயத்தில் விஷத்தை கிரீஸ்மா கலந்திருக்கிறார். கிரீஸ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது தெரிந்தால் ஒரு வருட காலமாக ஷரோனுடன் சேர்ந்து சுற்றிய  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியில் கசியவிடக்கூடும் என்ற அச்சத்தில் அவரையே கொலை செய்து காதலை முடிவுக்கு கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் கிரீஸ்மாவின் தாய் சிந்து மற்றும் அவரது மாமா நிர்மல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 95 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில்  கிரீஷ்மா மற்றும் விஷம் வாங்கிகொடுத்த அவரது மாமா நிர்மல் ஆகியோர் குற்றவாளிகள் என கூறிய நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் தாய் சிந்துவை விடுதலை செய்தது.

இந்நிலையில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட இருவருக்குமான தண்டனை விவரத்தை நீதிமன்றம் இன்று பிறப்பித்தது. அதன்படி, முக்கிய குற்றவாளியான கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனையும், அவரது தாய் மாமாவிற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow