”இனிமேல் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்...” யுபிஎஸ்சி நேரடி நியமனம் ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து!
யுபிஎஸ்சியில் நேரடி நியமனங்கள் மூலம் செயலாளர்களைத் நியமிக்க வெளியான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆக்ஸ்ட் 18 ஆம் தேதி, 45 துணை மற்றும் இணை செயலாளர்களை எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமல் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கும் ‘லேட்டரல் எண்ட்ரி’ குறித்து யுபிஎஸ்சி விளம்பரம் வெளியிட்டு இருந்தது. யுபிஎஸ்சியின் இந்த அறிவிப்பில் இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாததால் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதனைத்தொடர்ந்து மத்திய அரசானது யுபிஎஸ்சி தலைவர் ப்ரீதி சுடனுக்கு ‘லேட்டரல் எண்ட்ரி’யை ரத்து செய்யக்கோரி அறிவுறுத்தியது. இதனையடுத்து லேட்டரல் எண்ட்ரி தேர்வு முறையை ரத்து செய்து யுபிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார்.
அதில், “இண்டியா கூட்டணியின் கடுமையான எதிர்ப்பு காரணமாக லேட்டரல் எண்ட்ரி நியமனங்கள் மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. ஆனால், மத்திய பாஜக அரசு பல்வேறு வகைகளில் இட ஒதுக்கீடு முறையை பலவீனப்படுத்த முயற்சித்து வருவதால் நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”இடஒதுக்கீட்டில் தன்னிச்சையான 50 சதவீதம் என்ற உச்ச வரம்பு உடைக்கப்பட வேண்டும். அதோடு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என்றும் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?