கருணாநிதியை ராஜ்நாத் சிங் புகழ்ந்தது ஏன் தெரியுமா?.. முதல்வர் ஸ்டாலின் முன்பு போட்டுடைத்த ரஜினி!

''விமர்சனங்கள் தேவைதான். அது வேண்டும். ஆனால் விமர்சனம் மழை மாதிரி இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்கக் கூடாது. விமர்சனம் செய்யுங்கள்; ஒருவருடைய மனதை நோகடிக்காதீர்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Aug 25, 2024 - 02:14
Aug 25, 2024 - 15:02
 0
கருணாநிதியை ராஜ்நாத் சிங் புகழ்ந்தது ஏன் தெரியுமா?.. முதல்வர் ஸ்டாலின் முன்பு போட்டுடைத்த ரஜினி!
stalin rajini

சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வ. வேலு, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெருமையை பறைசாற்றும் வகையில், 'கலைஞர் எனும் தாய்' என்னும் நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரை முருகன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, ராஜகண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், காந்தி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன்,மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ்,மஸ்தான்,மெய்யநாதன், எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, துரை வைகோ மற்றும் கே. பாலகிருஷ்ணன், முத்தரசன், திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.  அமைச்சர் எ. வ. வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், ''அரசியலில் நுழைந்து கடினமாக உழைத்து பேச்சில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு மக்கள் மத்தியில் தொண்டர்கள் மத்தியில் புகழ், பெயர் எடுத்து தனக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பவர் அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலின். 

அறிவார்ந்தவர்கள் இருக்கும் சபையில் பேசாமல் இருப்பது அறிவாளித்தனம் என்று சொல்வார்கள். ஆனால் என்ன செய்வது நான் பேசித்தான் ஆக வேண்டும். இந்த விழாவில் என்ன பேசனும் என்பதைவிட என்ன பேசக்கூடாது என்பதை லிஸ்ட் போட்டு எடுத்து வந்தேன். உலகத்திலேயே எந்த ஒரு அரசியல் தலைவருக்கு இப்படி ஒரு நூற்றாண்டு விழாவை கொண்டாட மாட்டார்கள். இனியும் கொண்டாடப்போவதில்லை.  

கலைஞர் என்று சொன்னால் சினிமா, இலக்கியம், அரசியல் என அனைத்தையும் சொல்லலாம். சினிமாவில் கலைஞர் குறித்து நான் அதிகம் பேசி இருக்கிறேன். இலக்கியம் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. இப்போது அரசியல் குறித்து எதை பேச வேண்டும் என்பதை விட எதை பேசக் கூடாது என்பதை குறித்து திட்டமிட்டு வந்தேன். அருமை நண்பர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு திமுக அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றதற்கு ஸ்டாலினின் ஆளுமை, அரசியல் ஞானம் தான் முக்கியமான காரணமாகும்'' என்றார்.

தொடந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''பள்ளி ஆசிரியருக்கு பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். அதேபோல் திமுகவில் ஏராளமான பழைய மாணவர்கள் உள்ளனர். இந்த பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம் (நான் முன்வரிசை அமைச்சர்களை பார்த்து சொல்லவில்லை). அனால் ஸ்டாலின் அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டினவரு.  அவர் பேசுறது ஒன்னுமே புரியது. ஆனால் ஸ்டாலின் சார் Hats off to You.

ஏவிவிட்டால்தான் அனைவரும் வேலை செய்கின்றனர். ஆனால் ஏவிவிடாமலேயே வேலை செய்பவர் எ.வ.வேலு. திருவண்ணாமலையில் தங்கியபோது என்னை சொந்த மகனை போல பார்த்துக் கொண்டனர்.  அங்கு சமையல்காரர் இருக்கிறார். மீன் குழம்பு அருமையாக இருக்கிறது. வாழ்நாளில் இது போன்று சாப்பிட்டது இல்லை.

எ.வ.வேலு எழுதிய  'கலைஞர் எனும் தாய்' என்னும் நூல் தலைப்பு மிகவும் பொருத்தமான தலைப்பு. இந்த சமூகத்துக்காவும், மண்ணுக்காகவும் போராடியவர் கலைஞர் கருணாநிதி. அவர் சந்தித்த சோதனைகள், வேதனைகள் வேறு யாராக இருந்தாலும் காணாமல் போயிருப்பார்கள். விமர்சனங்கள் தேவைதான். அது வேண்டும். ஆனால் விமர்சனம் மழை மாதிரி இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்கக் கூடாது. விமர்சனம் செய்யுங்கள்; ஒருவருடைய மனதை நோகடிக்காதீர்கள். 

13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சியை கட்டிக்காத்தவர் கருணாநிதி. இப்போது 5 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டால் கூட திண்டாடுகிறார்கள். கருணாநிதி ஒரு மகான். அவருடைய புகழ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்லும். கருணாநிதி குறித்து இன்னும் அதிக புத்தகங்கள் வெளிவர வேண்டும்.  அவர் குறித்து திரைப்படமே எடுக்க வேண்டும். 

இப்போதெல்லாம் யார் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்கள்? ஆனால் கலைஞர் அப்படியல்ல. பத்திரிக்கையாளர்களை பார்த்தாலே அவரின் முகத்தில் புன்னகை மலரும். கலைஞர் பத்திரிகையாளர்களை சந்திக்க சந்தோஷப்படுவார். தெளிவான பதில் நக்கலாக பதில் கொடுப்பார். கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை குறித்து ராஜ்நாத் சிங் அரைமணிநேரம் பேசுகிறார் என்று சொன்னால், அது அவர் மட்டுமே பேசியிருக்க மாட்டார். மேலிடத்தில் (பாஜக தலைமை) இருந்து அவருக்கு உத்தரவு வந்துருக்கும். 

என்னை எப்போது பார்த்தாலும் கருணாநிதி நலம் விசாரிப்பது வழக்கம். கருணாநிதி 2 தடவை மிகவும் சோகமாக இருந்தார். முரசொலி மாறன் உடல் நிலை பாதித்த போதும், வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியபோதும் கலைஞர் சோகமாக இருந்தார். 'முதல்வன்' திரைப்படம் அரசை விமர்சனம் செய்யும் படமாக இருந்தாலும் கருணாநிதி அந்த படத்தை பார்த்து பாராட்டினார். பின்பு 'முதல்வன்' திரைப்பட வெற்றி விழாவிலும் தான் கலந்து கொள்வேன் என்று கருணாநிதி கூறியது அவரது தைரியத்தை காட்டுகிறது என்று நான் வைரமுத்துவிடம் கூறினேன். 

நான் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது என்னை பார்க்க வந்து, என் கையைப்பிடித்து, கண்ணில் கண்ணீரோடு நின்றார். அவரது கைகள் பூவைவிட அவ்வளவு மென்மையானதாக இருந்தது. அந்த கண்ணீரை என் வாழ்க்கையில் எந்நாளும் மறக்கவே முடியாது'' என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow