மனிதாபிமானமற்ற இஸ்ரேல்...அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல்... 71 பேர் பலியான சோகம்!

மனிதாபிமான பகுதி என வரையறுக்கப்படும் இந்த பகுதியில் போர் விதிகளின்படி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடாது. ஆனால் விதிகளை புறம்தள்ளி நிவாரண முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 71 அப்பாவி மக்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

Jul 13, 2024 - 22:02
Jul 16, 2024 - 13:40
 0
மனிதாபிமானமற்ற இஸ்ரேல்...அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல்... 71 பேர் பலியான சோகம்!
isreal attack

காஸா: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.

இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணவு, உடை, மருத்துவ வசதிகளில் இன்றி காஸாவில் இருந்து வெளியேறி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் வழியுறுத்தியும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த மறுத்து வருகிறது. 

போர் விதிகளை மீறி மருத்துவமனைகள் மீதும், பாதிக்கபட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை கவலையடைச் செய்துள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரையில் இந்த போரை நிறுத்த மாட்டோம் என்பதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக உள்ளார். 

இந்நிலையில், காசாவில் அகதிகள் தங்க வைக்கப்பட்டு இருந்த முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 71 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் என்ற நகரில் உள்ள நிவாரண முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மனிதாபிமான பகுதி என வரையறுக்கப்படும் இந்த பகுதியில் போர் விதிகளின்படி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடாது. ஆனால் விதிகளை புறம்தள்ளி நிவாரண முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 71 அப்பாவி மக்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் 289 பேர் படுகாயம் அடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

''இஸ்ரேல் ராணுவம் மனிதாபிமானத்தை மீறி அகதிகள் முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவித்துள்ளது'' என்று காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதை மறுத்துள்ள இஸ்ரேல் ராணுவம், ''நாங்கள் ஹமாஸின் ராணுவப் பிரிவின் தலைவர் முகமது டெய்ஃப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம் 

நாங்கள் தாக்குதல் நடத்தியது திறந்தவெளி பகுதி. அங்கு மக்கள் நடமாட்டம் இல்லை. தாக்குதலில் பொதுமக்கள் யாரும் இறந்தார்களா? என்பது குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது'' என்று கூறியது. ஆனாலும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow