Sheikh Hasina Resign : வங்கதேசத்தில் வன்முறை.. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

Sheikh Hasina Resign as Prime Minister of Bangladesh Violence : வங்கதேச வன்முறை காரணமாக இந்தியாவில் வங்கதேசத்தின் எல்லையோர பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து வங்கதேசத்தில் இருந்து யாரும் இந்தியாவுக்கு ஊடுருவுகின்றனரா? என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Aug 6, 2024 - 07:53
Aug 6, 2024 - 12:11
 0
Sheikh Hasina Resign : வங்கதேசத்தில் வன்முறை.. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
Sheikh Hasina Resign as Prime Minister of Bangladesh Violence

Sheikh Hasina Resign as Prime Minister of Bangladesh Violence : வங்கதேச நாட்டில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும். திறமையின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். முதலில் அமைதியாக நடந்த போராட்டம் நாளடைவில் வன்முறையாக மாறியது.

நாடு முழுவதும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இவர்களுக்கு ஆளும் கட்சியான அவாமி லீக் மாணவர்கள் கடும் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கற்களாலும், பயங்கர ஆயுதங்களாலும் தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மாணவர்களுடன் பலதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில், நேற்று நாடு முழுவதும் வன்முறை ருத்ரதாண்டவமாடியது. நேற்று ஒரே நாளில் மட்டும் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அந்நாட்டு ராணுவ தளபதி, அடுத்த அரசு பதவியேற்கும் வரை வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என்று கூறினார். முன்னதாக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவின் கொல்கத்தாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு பிரதமர் அலுவலகத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள் அங்கு இருந்த பொருட்களை சேதப்படுத்தினார்கள். ஏராளமான பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். மேலும் வங்கதேசத்தில் உள்ள கடைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் இந்து கோவில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

வங்கதேச வன்முறை காரணமாக அங்கு வசிக்கும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வெளியேறி விட்டனர். தற்போது ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரது சகோதரி லண்டன் குடியுரிமை பெற்றுள்ளதால், ஷேக் ஹசீனா லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு லண்டன் அனுமதி அளிக்கும்வரை அவர் இந்தியாவில் இருப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

வங்கதேச வன்முறை(Bangladesh Violence) காரணமாக இந்தியாவில் வங்கதேசத்தின் எல்லையோர பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து வங்கதேசத்தில் இருந்து யாரும் இந்தியாவுக்கு ஊடுருவுகின்றனரா? என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வங்கதேச நிலவரம் குறித்து பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை இந்திய பாதுகாப்புத் துறையினர் தேசிய ஆலோசகர் அஜித் தோவல் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான படைத்தளத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக, வங்கதேசத்தில் நிலவும் சூழல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியியிடம் விளக்கி கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow