டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு... மருத்துவமனையில் அனுமதி.. அமெரிக்காவில் பரபரப்பு!
மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரம்ப்பை சூழ்ந்து அவரை கேடயம்போல் பாதுகாத்தனர். ஆனாலும் டிரம்ப்பின் காதில் துப்பாக்கி குண்டு லேசாக உரசி காயம் அடைந்து ரத்தம் வடிந்தததால் பரபரப்பு நிலவியது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ளார்.
கடந்த 27ம் தேதி ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டா நகரில் ஜோ பைடனுக்கும், டொனால்ட் டிரம்புக்கும் இடையே முதல் விவாதம் நடந்தது. சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த விவாதத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, பணவீக்கம் மற்றும் நிதி விவகாரம், கருக்கலைப்பு சட்டம், புலம்பெயர்ந்தவர்கள் விவகாரம் ஆகியவை குறித்து இருவரும் பேசினார்கள்.
இந்த விவாதத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் பல்வேறு விஷயங்கள் குறித்து அதிரடியாக பேசினார். தற்போதைய அதிபர் ஜோ பைடன் அவரின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறி பின்வாங்கினார். முதல் விவாதத்தில் டிரம்ப் வெற்றி பெற்றதாக பல்வேறு ஊடகங்கள் தெரிவித்தன.
ஜோ பைடன் தடுமாறியதால் ஜனநாயக கட்சியில் ஜோ பைடனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகி, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்ச்செல் ஒபாமா போட்டியிட வேண்டும் என ஜனநாயக கட்சியில் பல்வேறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பென்சில்வேனியாவில் டிரம்ப் பரப்புரையில் பங்கேற்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரம்ப்பை சூழ்ந்து அவரை கேடயம்போல் பாதுகாத்தனர். ஆனாலும் டிரம்ப்பின் காதில் துப்பாக்கி குண்டு லேசாக உரசி காயம் அடைந்து ரத்தம் வடிந்தததால் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு படை அதிகாரிகள் டிரம்பை உடனடியாக டிரம்பை அங்கு இருந்து அழைத்து சென்றனர். டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே வேளையில் குடியரசு கட்சியின் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா புலனாய்வு அமைப்பான FBI விசாரணை நடத்தி வருகிறது.
டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். இதேபோல் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ஓபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் தலைவர்கள் மீது இதுபோல் தாக்குதல் நடத்தப்படுவது அரிதான ஒன்று. ஆனால் இப்போது டிரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?