International Olympic Games Starts in Paris : உலகளவில் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகளை இந்தாண்டு பிரான்ஸ் நாடு நடத்துகிறது. அதன்படி ஆகஸ்ட் 11ம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி பாரிஸில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு சென் நதியில் நடைபெறவுள்ள இந்த தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. 33வது ஒலிம்பிக் போட்டியான இதில், பல நாடுகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மிக முக்கியமாக வீரர்கள், வீராங்கனைகள் என இருதரப்பில் இருந்தும் தலா 5,250 பேர் என சமவிகிதத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
124 ஆண்டுகளுக்கு முன்னர் பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தான், முதன்முறையாக பெண்களும் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கான இன்றைய தொடக்கவிழாவிற்காக பிரான்ஸ் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படையினரும் பாரிஸ் சென்றுள்ளனர். அவர்களும் பிரான்ஸ் காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பல்வேறு பிரிவுகளாக மொத்தம் 40,000 பேர் ஒலிம்பிக் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறும் பாரீஸ் வான்பரப்பில் 150 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. பரீஸ் ஒலிம்பிக் போட்டியை காண, 97 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் இருந்து 20 பிரிவுகளில் மொத்தம் 117 வீரர்கள், வீராங்கனைகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் 13 வீரர்கள் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுகின்றனர். முன்னதாக நேற்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில், இந்திய மகளிர் அணி 4வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. இந்தியாவின் அங்கிதா பகத் 11, பஜன் கவுர் 22, திபிகா குமாரி ஆகியோர் 23வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - தனுஷின் ராயனுக்கு குவியும் வாழ்த்து
இந்தியாவில், ஹரியானா மாநிலத்தில் இருந்து அதிகபட்சமாக 24 வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர். பஞ்சாப்பில் இருந்து 19, தமிழ்நாட்டில் இருந்து 13 வீரர்களும், அசாம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தலா 4 பேர்களும் கலந்துகொண்டுள்ளனர். மேலும், கர்நாடகா 7, உத்தரபிரதேசம் 7, கேரளா 6, மகாராஷ்ட்ரா 5, டெல்லி 4, உத்தரகாண்ட் 4, மேற்கு வங்கம் 3, ராஜஸ்தான் 2, குஜராத் 2, சண்டிகர் 2, மத்திய பிரதேசம் 2, ஒடிஷா 2, மணிப்பூர் 2, பீகார் 1, கோவா 1, ஜார்கண்ட் 1, சிக்கிம் 1 வீரர்கள் பங்கேற்கின்றனர்.