Actor Karthi Wishes Dhanush Raayan Movie : தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் பலத்த எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியானது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி என்றாலும், மற்ற மாநிலங்களிலும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் காலை 6 மணிக்கே ராயன் திரையிடப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ரோகிணி திரையரங்கு முன்பு சுமார் 85 அடியில் தனுஷுக்கு கட்-அவுட் வைத்து அட்ராசிட்டி செய்துள்ளனர் ரசிகர்கள். இதனிடையே கோலிவுட்டின் முன்னணி பிரபலங்கள் பலரும் ராயன் வெற்றிப் பெற தனுஷுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து நடித்த பாரதிராஜா(Bharathiraja), ராயன் வெற்றிப் பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், 50வது படத்துக்காக வாழ்த்துகள் தனுஷ். உனது கடின உழைப்புக்காகவும், சினிமா மீதுள்ள ஆர்வத்திற்காகவும் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெறும், ராயன் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
அதேபோல், நடிகர் கார்த்தியும் ராயன் வெற்றிக்காக தனுஷுக்கு வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். தனுஷின் 50வது படமான ராயன் மிகப் பெரியளவில் சூப்பர் ஹிட் அடிக்க மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். மேலும் ராயன் படக்குழுவினருக்கும் கார்த்தி வாழ்த்துக் கூறியுள்ளார். இதனையடுத்து கார்த்தியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.
தனுஷின் நெருங்கிய நண்பரான இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் ராயன் வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். எனது அருமை நண்பன் தனுஷுக்கு அன்பான வாழ்த்துகள், 50வது படமான ராயன் வெற்றிப் பெற வாழ்த்துகள். இது அருமையான சாதனை, ராயனுக்கு சூப்பரான ஓபனிங் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார். இதனை ரீ-ட்வீட் செய்துள்ள தனுஷ், நன்றி மச்சான் என ஜிவி பிரகாஷுக்கு தனது அன்பை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், தனுஷின் ராயன் பெங்களூருவில் மட்டும் 510 ஸ்க்ரீன்களில் திரையிடப்படுகிறது. முதல் நாளில் மட்டும் இத்தனை ஸ்க்ரீன்களில் திரையிடப்படுவதால், மொத்தம் 20,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் கேரளாவில் 200க்கும் அதிகமான திரையரங்குகளில் ராயன் வெளியாகவுள்ளதாம். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் 500க்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் ராயன் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 90 சதவீதம் ஸ்க்ரீன்களில் இன்று ராயன் மட்டுமே திரையிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயன் ரிலீஸ் காரணமாக கமலின் இந்தியன் 2 ஷோ கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.