நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்தும் திமுக.. அண்ணாமலை ஆதங்கம்

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Jan 28, 2025 - 16:49
 0
நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்தும் திமுக.. அண்ணாமலை ஆதங்கம்
மு.க.ஸ்டாலின்-அண்ணாமலை

சென்னை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சென்னையில் உள்ள சுமார் 350-க்கும் அதிகமான பள்ளிகளில், சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு, அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்யப்படுகிறது.

இதன் மூலம், அம்மா உணவகங்களில் பணிபுரிவோருக்கு, நிலையான வருமானம் கிடைக்கப்பெற்று வந்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு, காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயன்றபோது, மாமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், அந்த முடிவைக் கைவிட்டனர். தற்போது, மீண்டும் தனியாருக்குத் தாரைவார்க்க, ஒப்பந்தம் கோரி இருக்கின்றனர். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம், அம்மா உணவகங்களை மேம்படுத்த  21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக அறிவித்தது திமுக அரசு. அப்படி மேம்படுத்தப்பட்ட அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரைவார்க்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்? 

மேலும் படிக்க: பஞ்சாப் கபடி போட்டி விவகாரம்.. சென்னை வந்தடைந்த வீராங்கனைகள்

கண்துடைப்புக்காகத் திட்டங்கள் அறிவிப்பது அல்லது தங்கள் லாப நோக்கங்களுக்காகத் திட்டங்களை மடைமாற்றுவது என, நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

தொடர்ந்து அம்மா உணவகங்களிலேயே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை கைவிடவேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு தன்னை தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார். அதுமட்டுமல்லாமல், திமுகவை  ஆட்சியில் இருந்து தூக்கி எறியும் வரை செருப்பு அணியமாட்டேன் என்று சபதம் எடுத்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow