ஒரே மேடையில் திருமாவளவன் – விஜய்... கூட்டணி முடிவு இதுதான்... திருமா உறுதி!

விசிக தலைவர் திருமாவளவனும், தவெக தலைவர் விஜய்யும், அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் கூட்டணியில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுபற்றி திருமாவளவன் கொடுத்துள்ள விளக்கம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nov 6, 2024 - 10:21
 0
ஒரே மேடையில் திருமாவளவன் – விஜய்... கூட்டணி முடிவு இதுதான்... திருமா உறுதி!
ஒரே மேடையில் திருமாவளவன் – விஜய்... கூட்டணி முடிவு இதுதான்... திருமா உறுதி!

தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதன் பரபரப்பு இப்போதே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முக்கியமாக நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதோடு, அதன் முதல் மாநில மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். கடந்த மாதம் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தவெக தலைவர் விஜய், எங்களுடன் கூட்டணி வைத்தால், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவதாக வாக்குறுதி கொடுத்தார்.

தமிழக அரசியல் களத்தில் இப்படியொரு அறிவிப்பை, இதுவரை எந்த அரசியல் கட்சியும் முன் வைத்தது கிடையாது. குறிப்பாக விஜய்யின் இந்த அறிவிப்பு, விசிக தலைவர் திருமாவளவனுக்கு விடுக்கப்பட்ட சிக்னலாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். ஆனால், விசிக தலைவர் திருமாவளவன், விஜய்யின் ஆஃபரை பண்டிகை கால தள்ளுபடி விற்பனை என விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில்தான் நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும் திருமாவளவனும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

அதாவது, அம்பேத்கர் பற்றிய நூல் ஒன்றை, திருமாவளவன் வெளியிட, அதனை தவெக தலைவர் விஜய் பெற்றுக்கொள்ளப் போகிறார் என சொல்லப்பட்டது. இந்நிகழ்ச்சி டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இதுபற்றி விளக்கம் கொடுத்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதியே இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நூலை வெளியிட இருந்ததாகவும், ராகுல் காந்தியும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது தான் விஜய், ரஜினி ஆகியோரையும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தது தெரியவந்தது. இதனால் தற்போதைய அரசியல் சூழலை வைத்தே விஜய்யுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது பற்றி முடிவு செய்வேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேநேரம் திமுகவுடனான கூட்டணியில் உறுதியாக இருப்பதாகவும், 2026 தேர்தலிலும் இது தொடரும் என்றும் திருமாவளவன் உறுதியாக கூறியுள்ளார். இதனால் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யும் திருமாவளவனும் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை இந்த நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றால், அது அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow