பணத்தை கொடுத்து வாக்கை பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பெருமைப்படலாமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

''திமுக-அதிமுக ஜென்ம எதிரி. ஆனால் இந்த தேர்தலில் காசை வாங்கி கொண்டு அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்தி உள்ளார்கள். இந்த தேர்தல் நேர்மையான முறையில் நடந்து இருந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும் என்பது தான் கள நிலவரம்''

Jul 14, 2024 - 00:28
 0
பணத்தை கொடுத்து வாக்கை பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பெருமைப்படலாமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!
Anbumani Ramadoss about Vikravandi by election

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா என இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், திமுக அன்னியூர் சிவா 67,440 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56,248 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,520 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.

விக்கிரவாண்டி அருகே உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களும் திமுக அரசுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்திய நிலையில், இது விக்கிரவாண்டி தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டது.

இதேபோல் விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக, தேமுதிக போட்டியிடாத நிலையில், அந்த வாக்குகள் பாமக பக்கம் செல்லும் என எதிர்பரக்கப்பட்டது. ஆனால் இந்த கணிப்புகள் அனைத்தும் பொய்யாகி திமுக பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பல்வேறு சவால்களை கடந்து கிடைத்த இந்த வெற்றியால் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ''விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கும் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றியால் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்'' என்று முதலவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில், பணத்தை கொடுத்து வாக்கை பெற்று  முதலமைச்சர் ஸ்டாலின் பெருமைப்படலாமா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நேர்மையான முறையில் எங்களுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

அண்ணாமலை உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பாமகவின் அனைத்து நிலை நிர்வாகிகள்,தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்தலில் திமுக பணம்,பொருள் அதிகாரத்தை வைத்து வெற்றி பெற்றுள்ளது. இது உண்மையான வெற்றி இல்லை..

நாங்கள் பெற்ற வாக்குகள்தான் உண்மையான வெற்றியாக கருதுகிறோம். 33 அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அங்கேயே தங்கி இருந்து மக்களை சந்தித்த வாக்குகளை கேட்காமல்,பணத்தை பொருளை கொடுத்தார்கள். 

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் ஒன்று தேவையா? அப்படி ஒன்று இருந்தால் தேர்தல் நடத்தும் பணிக்கு அவர்கள் தகுதி அற்றவர்கள். பணம் கொடுக்கிறார்கள் என அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் ஆணையத்துக்கு தெரியவில்லையா? நேர்மையான முறையில் தேர்தல் நடந்து இருந்திருந்தால் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். 

தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து முதலமைச்சர் பெருமையாக பேசுகிறார். இதில் என்ன பெருமை இருக்கிறது? காசை கொடுத்து வாக்கை பெற்றது ஒரு பெருமையா? 500 ரூபாய் பெரிய பணம். அவர்களிடம் 10000 கொடுத்தால் ஓட்டு போடாமல் இருப்பார்களா?  10,000 ரூபாய் கொடுத்துதான் திமுக வெற்றி பெற்றுள்ளது.

மக்களை இப்படியே வைத்து இருப்பது மக்களை அடிமையாக,பிச்சைகாரனாக வைத்திருப்பது தான் திராவிட மாடல். 56,300 வாக்குகள் நேர்மையான முறையில் நாங்கள் உழைத்து பெற்ற வாக்குகள்.  அதிமுகவின் ஒரு வாக்கு கூட திமுகவுக்கு போட மாட்டார்கள். திமுக அதிமுக ஜென்ம எதிரி. ஆனால் இந்த தேர்தலில் காசை வாங்கி கொண்டு அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்தி உள்ளார்கள்.  

இந்த தேர்தல் நேர்மையான முறையில் நடந்து இருந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும் என்பது தான் கள நிலவரம். நான் பிரச்சாரத்துக்கு செல்லும் போது எனக்கு ஒரு மாம்பழம் கொடுத்தார்கள் அதை கூட ஒரு கிலோ மாம்பழம் 65 ரூபாய் என கணக்கு எழுதி வைத்துள்ளார்கள்.

அவர்கள் செலவு செய்ததும் நாங்கள் ஆதாரங்களை வைத்துள்ளோம். சட்டரீதியாக இதை நாங்கள் எதிர்கொள்ள இருக்கிறோம்.திமுகவுக்கும் சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்கள் சமூக துரோகி என்று சொல்வது தான் சரியாக இருக்கும்'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow