'மக்கள் எங்கள் பக்கம்.. பாஜகவின் மாயை முறியடிப்பு'.. தேர்தல் வெற்றியால் ராகுல் காந்தி குஷி!
''விவசாயிகள், இளைஞர்கள்,தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் என அனைவரும் பாஜகவின் சர்வாதிகரத்தை ஒழித்து நீதியின் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகின்றனர்''
டெல்லி: தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதி உள்பட 7 மாநிலங்களின் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது.
திமுக வேட்பாளராக போட்டியிட்ட அன்னியூர் சிவா 67,440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல் மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா மற்றும் மாணிக்தலா என 4 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் இந்தியா கூட்டணியின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இமாச்சல பிரதேசத்தின் 2 தொகுதிகளிலும், உத்தரகாண்ட்டில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிவாகை சூடியது.
அதாவது இன்று இடைத்தேர்தல் நடந்த மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாஜக இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூர், மத்திய பிரதேச மாநிலம் அமர்வாரா என 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பீகாரில் ரூபாலி தொகுதியில் நடந்த தேர்தலில் சுயேச்சை ஒருவர் வெற்றி பெற்றார்.
ஏற்கெனவே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. தற்போதும் இடைத்தேர்தல்களில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளதால் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வெற்றியால் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''7 மாநில இடைத்தேர்தல் முடிவுகளும் பயம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற பாஜகவின் மாயையை முறியடித்துள்ளன.
விவசாயிகள், இளைஞர்கள்,தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் என அனைவரும் பாஜகவின் சர்வாதிகரத்தை ஒழித்து நீதியின் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகின்றனர். மக்கள் அனைவரும் தங்களின் வாழ்கையை மேம்படுத்தவும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் இந்தியா கூட்டணி பக்கம் நிற்கின்றனர்'' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றி குறித்து கூறுகையில், ''தங்களை தவறாக வழிநடத்தும் அரசியல் பயன்தராது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் நேர்மையான வெற்றியை விரும்புகின்றனர். இதற்கு இடைத்தேர்தல் முடிவுகளே சாட்சி'' என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இடைத்தேர்தல் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?