சென்னை: அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தவர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இதனையடுத்து அவரை விமர்சித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்திருந்தார். இதனை சுட்டிக்காட்டி சவுக்கு சங்கரின் மனுவை பட்டியலிட பதிவுத்துறை மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யக் கோரி சவுக்கு சங்கர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், வி.சி ஞானம் அமர்வு, எந்த அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி, நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்ற நடவடிக்கையை விமர்சிக்கலாம். ஆனால் அதில் தலையிடுவது தவறு எனக் கூறினர். தங்களது நற்பெயரை காப்பாற்றிக்கொள்ள தாங்கள் இங்கு இல்லை எனக் கூறிய நீதிபதிகள், நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தங்களது நடவடிக்கைகள் மூலமே தங்களுக்கான நற்பெயர் மதிப்பிடப்படும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து, அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் வழக்கறிஞராகவும் ஆர்.எஸ். பாரதி போன்றோர் பொதுவெளியில் பேசும் \போது மிகவும் கவனமாக பேச் வேண்டுமெனவும் அறிவுறுத்தினர். உள்நோக்கத்துடன் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக நினைக்கவில்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் மூலம் தங்களுக்கான மரியாதையை பெற முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளனர். ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நீதிபதியே மறுத்த நிலையில், தாங்கள் அதனை தொடர விரும்பவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.