திமுக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா..? விஜய் எங்களுக்கு எதிரி இல்லை- ஜெயக்குமார்
திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் , ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட நாங்கள் தயார் ? திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பட்டினம்ப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சுவிட்சர்லாந்து நாட்டு டாவோஸ் நகரில் நடைப்பெற்ற பொருளாதார மாநாட்டின் மூலம் இந்தியா 20 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், இதில் மகாராஷ்டிரா மாநிலம் மட்டும் 15 லட்சம் கோடி ஈர்த்துள்ளதாக தெரிவித்தார்.
மக்கள் வரிப்பணத்தில் சுவிட்சர்லாந்து சென்ற அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, முதலீடுகள் ஈர்க்காமல் என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார்.எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி எழுப்பிய கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காமல் ஜிடிபி உயர்ந்துள்ளதாக, பொருளாதார அறிக்கையை புரட்டுங்கள் என என்னென்னவோ பதில் அளித்தார்.
மதுரையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் 2026 -ல் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறியது என்றும் பலிக்காது. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றால் தமிழ்நாடு தலைகுனிந்து காணப்படுகிறது. தேர்தல் எப்போது வரும் என மக்கள் காத்திருக்கிறார்கள்.
அதிமுக என்றும் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை. திமுக தான் பதவிக்காக, குடும்பத்துக்காக தமிழ்நாட்டின் உரிமைகளை வீட்டுக் கொடுத்தது. பிரதமரை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் திமுக-பாஜக இடையே எழுதப்படாத ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலின்போது இந்த ஒப்பந்தம் குறித்து தெரியவரும்.
அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட அதிமுக தயாராக உள்ளது. திமுக அரசு தயாரா? என கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் மாளிகையில் பாஜக தலைவர்களுடன் சிரித்து பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அரசியல் நாகரீகம் மற்றும் பண்பாடு கருதி தான் அண்ணாமலை உடன் பேசியதாகவும், பாஜக உடன் இன்றும் என்றும் கூட்டணி இல்லை என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் கருத்து குறித்த கேள்விக்கு, தமிழ்நாடு பெரியார் மண், திராவிட மண். பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமை குரலாக ஒலித்தவர் பெரியார். பெரியாரை சிறுமைப்படுத்துபவர் சீமானாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கூறினார்.
விஜய் நடிக்கும் 69-வது படத்தின் போஸ்டரில், எம்.ஜி.ஆர் பட பாடலான நான் ஆணையிட்டால் என்ற வார்த்தையை பயன்படுத்தியது குறித்த கேள்விக்கு, எம்.ஜி.ஆர் ஒரு தவிர்க்க முடியாத சக்தி. எம்.ஜி.ஆரின் பாடல்களையும் தத்துவங்களையும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். விஜய் எங்களுக்கு எதிரி அல்ல. அவர் வேலையை அவர் பார்க்கிறார் . எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம் என பதிலளித்தார்.
What's Your Reaction?