தவெக மாநாட்டிற்கு இவர்களெல்லாம் வர வேண்டாம்.... விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப்போகும் அந்தத் தருணங்களுக்காகவே, என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Oct 20, 2024 - 17:46
 0
தவெக மாநாட்டிற்கு இவர்களெல்லாம் வர வேண்டாம்.... விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தவெக மாநாட்டிற்கு இவர்களெல்லாம் வர வேண்டாம்.... விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதன் முதல் மாநில மாநாடு, வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. தற்போது இந்த மாநாடு தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார் விஜய். 

அதில், “மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும்.

அரசியலை. வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல். ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள். மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி.

மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப்போகும் அந்தத் தருணங்களுக்காகவே. என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

இந்த நெகிழ்வான நேரத்தில் முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள். பள்ளிச் சிறுவர் சிறுமியர். நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள். முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது. 

ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow